தொடர் மின் வெட்டு பிரச்னை; முதல்வரிடம் நேரில் முறையிட முடிவு

கோவை: மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முறையிட தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் தினசரி எட்டு முதல் பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோவையில் உள்ள தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டுக்கமிட்டி சிறப்பு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கமிட்டி தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். டேப்மா, கொடிசியா, ஜிட்டா, காட்மா, சைமா, கோப்மா, சீமா, சிஸ்பா, டேக்ட் , காஸ்மோபேன், ஐ.சி.சி.ஐ., கோவைக் கிளை, கொசிமா, ஐ.ஐ.எப்., உள்ளிட்ட 30 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்குப்பின், கமிட்டி தலைவர் பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது : கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் மின்வெட்டால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த அக்., 25ம் தேதி மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறும் என தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தார்; இதற்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்தோம். ஆனால், தீபாவளிக்குப்பின் கோவையில் எட்டு மணி நேரமும், பிற மாவட்டங்களில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த 25ம் தேதி கோவை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமைப் பொறியாளர் தங்கவேலு, கோவை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரண்டு நாட்களில் மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்; ஆனால், இன்று வரை பிரச்னை தீரவில்லை. எனவே, மாநிலம் முழுவதும் சீரான முறையில் மின் வினியோகம், மின்வெட்டு அமல்படுத்த வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 6 க்கு வாங்கினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு பயன்பாட்டு கட்டணமாக ரூ.3.50 செலுத்த வேண்டியதை முற்றிலும் ரத்துசெய்ய வேண்டும். மின் வெட்டு பிரச்னை தீராத பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். ஏற்காடு இடைத்தேர்தல் முடிந்தபின் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தொழில் துறையினர் பிரச்னைகளை கூறி மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது, என கமிட்டி தலைவர் பாலசுந்தரம் கூறினார்.

Comments