' லாக்கரில் வெங்காயம் '-மோடி 'செயலில் இறங்கும் அரசு '-சோனியா ; சட்டீஸ்கரில் ஒரே நாளில் பிரசாரம்

பட்சார்: காங்கிரஸ் அரசு கவர்ச்சியான ஸ்லோகம் பாடியாக இருந்து வருகிறது என்றும், ஆனால் நாடு வளர்ச்சி பணிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்றும் பா.ஜ., ஆட்சி வளர்ச்சி பணிகளை தந்தது என்றும், காங்., ஆட்சியில் வெங்காயத்தை லாக்கரில் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் பா.ஜ., பிரதம வேட்பாளர் மோடி சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.


அவர் மேலும் கூறுகையில்; இங்கு இந்த மாநிலம் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கு இந்த மக்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த மாநிலத்தை கொள்ளைக்காரர்களிடம் இருந்து முதல்வர் ராமன்சிங் காப்பாற்றியுள்ளார். பா.ஜ., ஆளும் மாநிலத்தை மத்திய அரசு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தை விட பா.ஜ., ஆளும் மாநிலங்களே சிறந்து விளங்குகிறது. இன்னும் வரும் காலக்கட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆதலால் மக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு தர வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் வெங்காய விலை கூட உச்சிக்கு சென்று விட்டது. வெங்காயத்தை தேடி மக்கள் அலைகின்றனர். வெங்காயம் லாக்கரில் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை. இவ்வாறு மோடி பேசினார்.

வறுமை ஒழியவில்லை: சோனியா சட்டீஸ்கர் மாநிலம் பஸ்டார் மாவட்டம் கொண்டாகான் பகுதியில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்., தலைவர் சோனியா பேசுகையில்: இந்த மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. திறமையற்ற நிர்வாகத்தால் இங்கு வறுமை ஒழிக்கப்படவில்லை. மாறாக வளர்ந்திருக்கிறது பா.ஜ., வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கும். ஆனால் காங்., செயல்படுத்தி காட்டும். மலை வாழ் மக்களுக்கு இங்கு போதிய பாதுகாப்பு இல்லை. இவ்வாறு சோனியா பேசினார்.

வெடிகுண்டு புதையல் : நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்டசைப தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதற்கென காங்., பா.ஜ., தரப்பில் தங்கள் பக்கம் வெற்றியை தக்க வைக்க கட்சியினர் களம் இறங்கி மக்களை சந்தித்து ஓட்டுக்கள் போட ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாஸ்டர் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடிகுண்டு நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் வரும் 11 மற்றும் 19 தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு ஓட்டு போட யாரும் செல்லக்கூடாது என நக்சல் ஆதிக்கம் உள்ள ஏறக்குறைய 10 மாவட்டங்களில் நக்சல்ககள் வெளிப்படையாக அச்சறுத்தி வருகின்றனர். இந்த மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் நக்சல்கள் பெரும் தாக்குதலை நடத்தக்கூடும் என உளவு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் தரோன்பால்- சுக்மா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் புதைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி செயல் இழக்க செய்தனர், அதிர்ஷ்ட வசமாக பெரும் குண்டு வெடிப்பு தவிர்க்கப்பட்டது. மோடி, சோனியா பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிக்கு மிக அருகாமையில் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

76 போலீசாரை கொன்ற இடம்: தற்போது வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் தான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், 2010ல், நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணிவெடியில் சிக்கி 76 போலீசார் கொல்லப்பட்டனர்

பாஸ்டர் பகுதியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி , காங்., தலைவர் சோனியா இன்றும் (7ம் தேதி), பிரசாரம் செய்தனர். ராகுல் நாளையும் ( 8ம் தேதி), பிரதமர் நாளை மறுநாள் ( 9ம்தேதி) பிரசாரம் செய்விருக்கின்றனர். இந்நிலையில் வெடிகுண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Comments