தமிழகத்தில், 6,800க்கும்
மேற்பட்ட, 'டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகளில், உள்நாட்டில்
தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானம், பீர், ஒயின், ஸ்காட்ச் உள்ளிட்ட
மதுபான வகைகள் விற்கப்படுகின்றன. 180 எம்.எல்., முதல், 1,000 எம்.எல்.,
வரையிலான சரக்குகள், குறைந்தபட்சம், 70 முதல், அதிகபட்சம், 7,745 ரூபாய்
வரை, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன.
டாஸ்மாக்
கடைக்குத் தேவையான சரக்குகளை, 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், சப்ளை
செய்கின்றன. இந்நிறுவனங்கள், உள்நாட்டில் உள்ள அதன் ஆலையில்,
தயாரிக்கப்படும் சரக்குகளை சப்ளை செய்வதுடன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ்,
இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும், உயர்ரக சரக்குகளை இறக்குமதி
செய்து, டாஸ்மாக் கடைக்கு விற்பனை செய்கின்றன. 'மதுபான தயாரிப்புக்கான
மூலப்பொருட்கள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, இறக்குமதி செலவினம்
அதிகரிப்பு போன்ற காரணங்களால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே,
மதுபான விலையை உடனடியாக உயர்த்த வேண்டும்' என, மதுபான தயாரிப்பு
நிறுவனங்கள், தமிழக அரசுக்கு, கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து, மதுபான
தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்பது குறித்து, அரசு, பரிசீலனை
செய்து வருகிறது. கோரிக்கை ஏற்கப்பட்டால், டாஸ்மாக் கடைகளில், மதுபானங்கள்
விலை உயரும். இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில்,
'கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மது வகைகள் விலை உயர்த்தப்பட்டன.
தற்போது, மதுபான நிறுவனங்களின் கோரிக்கை நியாயமானது தான் என்றாலும், விலையை
உயர்த்துவது குறித்து, முடிவு எடுக்கும் அதிகாரம், முதல்வர்
ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு' என்றார்.
Comments