அதிபர் ராஜபக்சே முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவி ஏற்பு

கொழும்பு: வடக்கு மாகாண முதல்வராக, விக்னேஸ்வரன், இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில், நேற்று, பதவி ஏற்றார். இலங்கையில், விடுதலை புலிகளுடனான சண்டை கடந்த, 2009ல் ஓய்ந்தது. இதையடுத்து, வடக்கு மாகாணத்தில், 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம், 21ம் தேதி, தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 38 இடங்களில், தமிழ் தேசிய கூட்டணி, 30 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கிறது.

இந்த மாகாண முதல்வராக, இலங்கை சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். வடக்கு மாகாண கவர்னராக, சந்திரசிரி உள்ளார். இவர், முன்னாள் ராணுவ தளபதி. இவரது தலைமையில் பதவி ஏற்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விரும்பவில்லை.
இதையடுத்து, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில், ராஜபக்சே, விக்னேஸ்வரனுக்கு, நேற்று, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குர்ஷித் பேட்டி : வடக்கு மாகாணத்தில், புதிய அரசு ஆட்சி அமைத்துள்ளதால், அந்த மாகாணத்துக்கு உரிய அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித், நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
"இருநாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, இருதரப்பு மீனவ பிரதிநிதிகள் கலந்து பேசி, உரிய சூழலை ஏற்படுத்துவர்' என, சல்மான் குர்ஷித்தும், பீரிசும் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளனர். இலங்கையின், சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பது, 10 ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்குவது ஆகிய ஒப்பந்தங்கள், கொழும்பில், இருநாட்டு அமைச்சர்கள் முன்னிலையில், நேற்று, கையெழுத்தானது.

Comments