தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.டாஸ்மாக் கடைகளில், வார இறுதி நாட்களான, சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில், மற்ற நாட்களை விட, கூடுதலாக மது வகைகள் விற்பனையாகும்.வரும் ஞாயிற்றுக் கிழமை, தமிழகத்தில், ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், கடைகளில், ஆயுத பூஜை கொண்டாடினால், விற்பனை பாதிக்கும் என்பதால், சனிக் கிழமை, ஆயுத பூஜை கொண்டாட, கடை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில், 'எங்களின் சொந்த பணத்தை போட்டு தான், பொறி, கடலை உள்ளிட்டவற்றை வாங்கி, ஆயுத பூஜை கொண்டாடுகிறோம்' என்றார்.டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆயுத பூஜை என்ற பெயரில், ஆண்டுக்கு ஒரு முறையாவது, பணியாற்றும் இடத்தை சுத்தப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆயுத பூஜை என்ற பெயரில், 'குடிமகன்'களிடம் கூடுதல் தொகை வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Comments