காங்கிரஸ்- பா.ஜ. சமபலத்தில் வந்தால் காங்கிரசை மா.கம்யூ.,ஆதரிக்குமா? பிருந்தா காரத் மறுப்பு

நாகர்கோவில்: வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசும், பா.ஜ.,வும் சமபலத்தில் வந்தால் காங்கிரசை மா.கம்யூ., ஆதரிக்கும் என்ற பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று பிருந்தா காரத் கூறினார்.

நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 30-ம் தேதி டில்லியில் காங்கிரஸ், பா.ஜ., அல்லாத அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மூன்றாவது அணி உருவாவதன் அவசியம் பற்றி நாட்டு மக்களுக்கு உணர்த்தப்படும். இந்த கூட்டத்தில்
கலந்து கொள்ள முடியாததை கூறியுள்ள ஜெயலலிதா தனது பிரதிநிதியை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. வரும் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் பிரச்னைகளை முன்வைத்துதான் மா.கம்யூ., கூட்டணி பற்றி முடிவெடுக்கும். மக்கள் பிரச்னைகளை முன்வைத்து போராடும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். நிலக்கரி ஊழலில் பிரதமர் தொடர்ந்து மவுனம் சாதிப்பதால் அதிலிருந்து அவர் தப்ப முடியாது. இந்த ஊழலில் காங்கிரசின் கை மேலோங்கியுள்ளது. இந்த விஷயத்தில் சிபிஐ உடனடியாக பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலக ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுவதில் காங்கிரசும், பா.ஜ.,வும் ஒரே கொள்கையைதான் கொண்டுள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்தை பொறுத்தவரை உற்பத்தியை விட அதன் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். அதற்கு தேவையான உபரி பொருட்கள் வந்து சேர்ந்த பின்னர் உற்பத்தி தொடங்கினால் போதுமானது. வரும் தேர்தலில் காங்கிரசும், பா.ஜ.,வும் சரிசமமான இடங்களை பெற்றால் காங்கிரசை மா.கம்யூ., ஆதரிக்கும் எனறு பிரகாஷ்காரத் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது பற்றி கேட்ட போது அப்படிப்பட்ட கருத்தை பிரகாஷ்காரத் எந்த இடத்திலும் வெளியிடவில்லை. தவறான புரிதலின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. காங்கிரஸ் இதை திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. வரும் 30-ம் தேதி மூன்றாவது அணி அமையும் போது இந்த பிரச்சாரம் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments