தி.மு.க.,வினருக்கு சுறுசுறுப்பு இல்லை: கருணாநிதி வருத்தம்

சென்னை:'வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில், தி.மு.க.,வினர் சுறுசுறுப்பை காட்டவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்ய, வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 2014ல் ஜனவரி 1ல் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், வாக்காளர் பட்டியலில்
சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை, தற்போதுள்ள பட்டியலில் இருந்து முறைப்படி நீக்கவும், உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஆனால், இப்பணியில், தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் சுறுசுறுப்பை காட்டவில்லை. அதே நேரத்தில் ஆளுங்கட்சியினரே வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் நடைபெறும் பள்ளிகளில் அதிகாரிகளை முற்றுகையிடுவதை போல சூழ்ந்து, மற்ற கட்சியினருக்கு இடம் தராத வகையில், தாங்கள் விரும்புகிறவர்களை விதிமுறைகளுக்கு புறம்பாக, புதிய உறுப்பினராக சேர்ப்பதில் முனைப்பு காட்டி கட்டாயப்படுத்தி வருவதாக, எனக்கு செய்திகள் வந்துள்ளன.எனவே, கட்சித் தொண்டர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் உடனடியாக எந்தவிதமான சுணக்கமும் இன்றி, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடவடிக்கைகளில் சட்டத்திற்கு உட்பட்டு, மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


பிரதமருக்கு கருணாநிதி கடிதம்:

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

மன்மோகன் சிங்கிடம், கருணாநிதி எழுதிய கடிதத்தை, ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழி மூலம் வழங்கினார். கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:செப்., 28ம் தேதி, தமிழகத்தின், ஆறு கடலோர மாவட்டங்களின் மீனவர் சங்க பிரதநிதிகள் சென்னை வந்து, தங்கள் பிரச்னைகள் குறித்து தி.மு.க.,விடம் மனு கொடுத்தனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயல்பாடுகள், தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும், தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும். இலங்கைக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் செல்லும்போது, இப்பிரச்னை குறித்து வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். இந்த கடிதத்தின் நகலை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடமும் கனிமொழி வழங்கினார்.

Comments