அ.தி.மு.க.,வின் முதல்கட்ட வெற்றி: மிரண்டு போன தி.மு.க., - தே.மு.தி.க.,

அக்டோபர், 6ம் தேதி ஒவ்வொரு ஆண்டையும் போல, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 18 வயதை நிரம்பிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணிக்கான முகாம் துவங்கியது.

இறந்து போன வாக்காளர்களின் பெயரை நீக்கும் பணியும், அன்றைக்கு நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஆனால், தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால், இந்தமுறை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், பெயரை சேர்க்கும் ஆர்வம் பலருக்கும் இருந்தது. ஆனால், தெளிவான வழிமுறைகள் தெரியாது என்பதால், பலரும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, பெரிய அளவில் தடுமாறினர். இந்த விஷயத்தைத் தான், இந்த முறை, அ.தி.மு.க. முழு அளவில் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பலர் பெயர் விடுபட்டிருக்க, இந்த ஆண்டுக்கான முதல் முகாமிலேயே பெரும் எண்ணிக்கையில், பொதுமக்கள் பல இடங்களுக்கும் வந்து, தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருந்தனர்.

தேர்தல் கமிஷன், கடந்த ஆண்டு தெளிவாகப் போட்ட, ஒரு உத்தரவின்படி, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்குமாக அமைக்கப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது. அந்த முகாம்களில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒரு ஏஜன்ட்டை நியமித்துக் கொள்ள, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில் ஒரு ஏஜன்ட், 30 பேர் வரையில், முகாம் நடைபெறும் இடம் வரையில் அழைத்து வந்து, வாக்காளர் பட்டியலில் சேர்த்து விடலாம்.
இப்படி அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அமைச்சர்களை முடுக்கிவிட்டு, இந்த பணியை சிறப்பாக செய்து முடிக்க, கடந்த வாரம் உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்படி, மூன்று நாட்களுக்கு முன்பாக எல்லா அமைச்சர்களும், தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் ஒவ்வொரு பூத்திலும், வாக்காளர் சேர்க்கை நடக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். பூத் ஏஜன்ட்களுக்கு அமைச்சர்கள் தரப்பிலிருந்து, பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பேரை, இதுவரையில் வாக்காளர் பட்டியலில், அ.தி.மு.க. சேர்த்திருக்கிறது.சிறப்பாக பணியாற்றி, அதிக அளவில் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பூத் ஏஜன்ட்களின் செயல்களை பாராட்டி, அவர்களுக்கு சிறப்பு வெகுமதி வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார்.மற்ற கட்சிகள், முதல்கட்ட முகாமை கோட்டைவிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக, 20 மற்றும், 27 தேதிகளில் நடக்க உள்ள முகாமுக்காக காத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க.,வின் சுறுசுறுப்பை அறிந்து, தி.மு.க., - தே.மு.தி.க. வட்டாரங்கள், அப்செட் ஆகி உள்ளன.
கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்த கருணாநிதி, "நாம் தெருமுனை பிரசாரம் போடலாம்; திண்ணை பிரசாரம் செய்யலாம்; போராட்டம் நடத்தலாம்; ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கலாம். ஆனால், மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய இந்த மாதிரி விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டு, அவர்களுக்கு உதவி எதுவும் செய்ய வில்லை என்றால், மக்கள் நம்மை புறக்கணிப்பர். எனவே, இது போன்ற விஷயங்களில் இனியாவது கவனமாக இருங்கள்' என, கண்டிப்புடன் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் பணிகளில், இதுவும் ஒன்று. ஏற்கனவே அ.தி.மு.க., தரப்பு, இதில் முனைப்பாக செயல்படுகிறது என்றால், அவர்களோடு மோத வேண்டாம்; முடிந்தவரையில் வாக்காளர்களுக்கு, உதவி செய்யுங்கள்' என, கட்சியினரிடம் கூறியுள்ளார். ஆனால், மற்றக் கட்சிகளில், இது தொடர்பாக யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

Comments