அமேதியை பெங்களூரு ஆக்க போகிறாராம் ராகுல்

அமேதி:''அமேதியை பெங்களூரு ஆக்குவேன்,'' என, கூறியுள்ளார், அந்தத் தொகுதியின் லோக்சபா எம்.பி.,யும், காங்., துணைத் தலைவருமான ராகுல். 'ஆண்டாண்டு காலமாக, நேரு, இந்திரா குடும்பத்தின் வசம் உள்ள அந்தத் தொகுதி, துளியளவும் முன்னேறாத நிலையில், ராகுலின் இந்த அறிவிப்பு வினோதமாக உள்ளது' என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.

காங்., துணைத் தலைவர் ராகுல், தன், லோக்சபா தொகுதியான, உ.பி., மாநிலம் அமேதியில், புதிதாக அமைக்கப்படவுள்ள, உணவு பூங்காவுக்கு, நேற்று அடிக்கல்
நாட்டினார்.

இந்த விழாவில், அவர் பேசியதாவது:விவசாயிகள் படும் சிரமங்கள், வேதனை அளிக்கிறது. விளைபொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை விற்பது வரை, பல்வேறு சிரமங்களுக்கு, அவர்கள் ஆளாகின்றனர். உருளை கிழங்கை விளைவிக்கும் விவசாயிகள், அவற்றை, 1 கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், அதை, சிப்சாக தயாரித்து விற்பவர்கள், 1 கிலோ, 400 ரூபாய்க்கு விற்கின்றனர்.இதேபோல், உ.பி., விவசாயிகள், பல வகை சுவையான மாம்பழங்களை, விளைவிக்கின்றனர். இவற்றில், பல ரகங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனாலும், அதற்கேற்ற தொகை, அவர்களுக்கு கிடைப்பது இல்லை.உ.பி., விவசாயிகளின் இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே, அமேதியில், உணவு பூங்கா அமைக்கப்படவுள்ளது. இனிமேல் இது, மிகப் பெரிய விவசாய சந்தையாகச் செயல்படும். அமேதியை பெங்களூருவாக மாற்றுவேன். இந்த பூங்கா மூலம், 2,500 பேருக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.இவ்வாறு, ராகுல் பேசினார்.

அமேதி லோக்சபா தொகுதியின் இப்போதைய எம்.பி.,யாக ராகுல் உள்ளார். இதற்கு முன், அந்தத் தொகுதி, அவர் தாய், சோனியா வசம் இருந்தது. அதற்கு முன், அவரின் தந்தை ராஜிவ், பாட்டி இந்திரா என, இவர்கள் குடும்பத்தினர் வசம் தான் இருந்துள்ளது. எனினும், அந்தத் தொகுதி, உ.பி.,யின் மிகவும் பின்தங்கிய தொகுதியாகவே விளங்குகிறது.மேலும், இன்னும் சில மாதங்களில், லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், 'அமேதியை, பெங்களூரு ஆக்குவேன்' என, ராகுல் அறிவித்திருப்பது வினோதமாக உள்ளது என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.

Comments