"வங்கி கடனை திருப்பி செலுத்த வேண்டாம்': காங்., தலைவர் அதிரடி

பெங்களூரு:""வங்கிகளில், சிறுபான்மையின மக்கள் கடன் பெற்றிருந்தால், அதை திருப்பிச் செலுத்த வேண்டாம்; ஏராளமான பண முதலைகள், வங்கிகளில் கடன் வாங்கி, பணத்தை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்,'' எனப் பேசி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரா, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், சித்தராமைய்யா தலைமையிலான அரசு, பொறுப்பில் உள்ளது. இதில், துணை முதல்வர்
பதவி தனக்கு வேண்டும் என, அடம் பிடித்து வருபவர், மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரா. ஆனால், அவருக்கு அந்தப் பதவியை வழங்க, காங்கிரஸ் மேலிடம் தயாராக இல்லை. இதனால், சித்தராமைய்யா அரசை, வாய்க்கு வந்தபடி வசைபாட, பரமேஸ்வரா தவறுவதில்லை.

நேற்று முன்தினம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசும் போது, ""முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வங்கிகளில் இருந்து கடன் வாங்கி இருந்தால், திருப்பிச் செலுத்தாதீர்கள்; ஏனெனில், ஏராளமானோர், பல ஆயிரம் கோடி ரூபாயை வாங்கி, ஏப்பம் விட்டுள்ளனர்; அதனால், நீங்களும் திருப்பிச் செலுத்தாதீர்கள்,'' என்றார்.

அது போல், சில வாரங்களுக்கு முன், "முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை, சிறப்பு கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டும்' என்றார்.

இப்படி, அடிக்கடி சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல், சித்தராமைய்யா அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் பரமேஸ்வரா மீது, கட்சி மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.

பரமேஸ்வராவின் தடாலடி பேச்சு குறித்து, முதல்வர், சித்தராமைய்யா, தனக்கு நெருக்கமானவர்களிடம், ""இப்படியே அவர் பேசிக் கொண்டிருந்தால், துணை முதல்வர் பதவி அவருக்கு கண்டிப்பாக கிடைக்காது. கட்சியிலிருந்தும் "கட்டம்' கட்டப்படலாம்,'' என்று கூறியுள்ளார்.

Comments