முதல்வர் தொகுதியை சேர்ந்தவர்கள் போயஸ் கார்டனில் முற்றுகை: அரசு தலைமை கொறடா மீது சரமாரி புகார்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டோர், மாவட்டச் செயலர் மீது புகார் கூறுவதற்காக, போயஸ் கார்டனை முற்றுகையிட்டதால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த, திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலர் ராஜகோபால், அந்தநல்லூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் ரவிசங்கர், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் முருகேசன்,
எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலர் கர்ணன், இணை பொருளாளர் சுப்ரமணி, விவசாயப் பிரிவு தலைவர் ஆதிசிவன் ஆகியோர், நேற்று முன்தினம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.


விரட்டியடிப்பு:

இதனால், அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், தங்கள் ஆதரவாளர்களுடன், நேற்று முதல்வரை சந்தித்து, மனு கொடுப்பதற்காக, சென்னை, போயஸ் கார்டனுக்கு வந்தனர். அவர்களை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரட்டி அடித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளரான, அரசு தலைமை கொறடா மனோகரன், கட்சி நிர்வாகிகள் வீட்டு விசேஷங்களுக்கு வருவதில்லை. கட்சியினர் இறந்தால், ஆறுதல் கூற வருவதில்லை. முதல்வர் ஓட்டு கேட்க வந்தபோது அறிவித்த, மேக்குடி பேரூர் இணைப்பு பாலம், மருதாண்டாகுறிச்சி கூடலூர் இணைப்பு பாலம் பணிகள், இன்று வரை முடியாமல் உள்ளது.
மறியல்:

இதை முடிக்கும்படி, ஒன்றியச் செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான அழகேசன், தொகுதி பொறுப்பாளர் மனோகரன், ஆகியோரிடம் பல முறை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக, கடந்த, 14ம் தேதி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். மாவட்டச் செயலரும், ஒன்றியச் செயலரும், கூட்டுறவு சங்கத் தேர்தலில், மாற்று கட்சியில் இருந்தவர்களுக்கும், அவர்கள் ஜாதியை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தனர். லோக்சபா தொகுதி, ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள் கூட்டம், முதல்வர் உத்தரவின்படி, திருச்சி, ரோஷன் மஹாலில் நடந்தது. ஒரே மண்டபத்தில், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மேற்கு தொகுதி கூட்டம் நடந்தது. திருச்சி மேற்கு தொகுதி, ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கு, டீ, இனிப்பு, காரம் வழங்கப்பட்டது. ஸ்ரீ"ரங்கம் தொகுதியினருக்கு, தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. கட்சி ஆண்டு விழா அன்று, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்க சென்றோம். கட்சியினர் குறைவாக வந்திருந்தனர். அப்போது, மாவட்டச் செயலரும், ஒன்றியச் செயலரும், கட்சியினரை கண்டு கொள்ளாததால், கட்சி நிர்வாகிகள் வருகை குறைந்து வருகிறது. இதுகுறித்து, முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அங்கு வந்தோர் பேசினர். அங்ககேயே புகார் மனு எழுதப்பட்டு, அனைவரும் கையெழுத்திட்டனர். இதை அறிந்த, மாவட்டச் செயலர், சம்பந்தப்பட்டவர்கள் மீது, தவறான தகவலை தெரிவித்து, கட்சியை விட்டு நீக்கி விட்டார். உண்மை நிலையை, முதல்வரிடம் தெரிவிப்பதற்காக, போயஸ் கார்டனுக்கு வந்தோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Comments