தமிழகத்தில், ஆறு
மாதங்களுக்கு ஒரு முறை, சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். பட்ஜெட்
கூட்டத்தொடர், ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும். அப்போது, தினமும் காலை
முதல் மாலை வரை, கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.,க்கள் பசியாறுவதற்காக, சட்டசபை கூட்ட அரங்கு அருகில், தமிழ்நாடு
தலைமைச் செயலகப் பணியாளர் கூட்டுறவு அருந்தகம் சார்பில், 'கேன்டீன்'
அமைக்கப்பட்டிருக்கும்.
உணவு வகை:
அங்கு, காலை உணவாக, இட்லி, பொங்கல், வடை, பூரி, டீ, காபி போன்றவை வழங்கப்படும். மதியம், சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், போன்றவை வழங்கப்படும். இதை சாப்பிட விரும்புவோர், தங்கள் சொந்த பணத்தில், சாப்பிட வேண்டும். அதேபோல், தனியார் உணவகங்களும், மதியம் அனுமதிக்கப்படுவது உண்டு. துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் துறை ஊழியர்களுக்கு, துறை சார்பில், பிரபல உணவகங்களில் இருந்து, உணவு வரவழைக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்படும். சில அமைச்சர்கள், அனைவரையும் திருப்தி படுத்துவதற்காக, ஆற்காடு பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்வர்.
பரிசு:
உணவு வகைகளுடன், பரிசு பொருட்களும் வழங்கப்படும். இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, கோவில் பிரசாதமாக, லட்டு, முறுக்கு, சர்க்கரை பொங்கல், பழநி பஞ்சாமிர்தம், போன்றவை வழங்கப்படும். இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு ஊழியர்கள், மானியக் கோரிக்கையை, ஆர்வமுடன் எதிர்பார்ப்பர். குளிர் கால கூட்டத்தொடர், ஒரு வாரம் மட்டும் நடைபெறும். இதில், யாருக்கும் உணவு இலவசமாக வழங்கப்படாது. அனைவரும் பணம் கொடுத்து தான் உணவு சாப்பிட வேண்டும்.
ஏக்கம்:
தற்போது, அனைத்து மாநகராட்சிகளிலும், 'அம்மா' உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இட்லி ஒரு ரூபாய், பொங்கல், ஐந்து ரூபாய், மதியம் சாம்பார், லெமன் சாதம், ஐந்து ரூபாய், தயிர் சாதம், மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. உணவு வகைகளும் தரமாக வழங்கப்படுகின்றன. எனவே, வரும், 23ம் தேதி துவங்கி, ஒரு வாரம் நடக்க உள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின் போது, அம்மா உணவகத்தில் இருந்து, உணவு வகைகளை சப்ளை செய்தால், அவற்றை ருசி பார்க்கலாம் என, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வமாக உள்ளனர். இவ்விருப்பத்தை, 22ம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தின் போது, முதல்வரிடம் தெரிவிக்க, அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
Comments