சிறை தண்டனை பெற்ற லாலுவை தகுதி நீக்கம் செய்ய வாகன்வதி வலியுறுத்தல்

புதுடில்லி: கால்நடை தீவன ஷழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஜெகதீஷ் சர்மாவின் எம்.பி., பதவிகளை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என லோக்சபா செயலகத்திடம் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார். மேலும் இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


கடந்த ஜூலை 10ம் தேதி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், குற்றவழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் பதவிகள் உடனடியாக பறிபோகும் என கூறியது. இதனையடுத்து இந்த சட்டத்தை நீர்த்து போக செய்ய மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர முடிவு செய்தது. இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மத்திய அரசு அவசர சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜெகதீஷ் சர்மா ஆகியோருக்கு ஐந்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தகுதியற்றவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ரஷீத் மசூத்துக்கு நான்கு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவர்களின் பதவியை பறிப்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், லாலு மற்றும் ஜெகதீஷ் சர்மாவின் எம்.பி., பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி, லோக்சபா செயலகத்திடம் கூறியிருந்தார்.

முன்னதாக, குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற இரண்டு எம்.பி.,க்களை உடனடியாக தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார். ஆனால், இதன் மீது லோக்சபா செயலகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தது. எம்.பி.,க்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பான நடைமுறைகள் குறித்து, லோக்சபா செயலகம் அட்டர்னி ஜெனரலை மீண்டும் அணுகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக, கிரிமினல் எம்.பி.,க்களின் பதவியை பறிப்பது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ள வாகன்வதி,கால்நடை தீவன ஷழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஜெகதீஷ் சர்மாவின் எம்.பி., பதவிகளை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் . இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி, குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.,க்களின் பதவிகள் உடனடியாக பறிபோகும். இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடுவது தாமதப்படுத்துவது என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தாமதப்படுத்துவது போலாகும் என கூறியுள்ளார். எம்.பி.,க்களை தகுதி நீக்கம் செய்வதை சம்பந்தப்பட்ட அவைகள் தான் செய்ய வேண்டும் என கூறினார்.

லாலு மற்றும் ஜெகதீஷ் சர்மாவின் எம்.பி., பதவிகளை பறிப்பது தொடர்பாக வாகன்வதி கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 10ம் தேதி குற்றவழக்குகளில் த ண்டனை பெறும் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உடனடியாக அவர்களின் பதவிகள் பறிபோகும் என தெளிவாக கூறியுள்ளது. குற்றவழக்குகளில் எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களி தண்டனைக்கு ஐகோர்ட்கள் இடைக்கால தடை விதித்தாலும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு பொருந்தாது. அவ்வாறு பிரச்னை எழும்போது, அதனை தனியாக கையாள வேண்டும். தற்போது குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.,க்களின் பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தள்ளிப்போகக்கூடாது என கூறியுள்ளார்.

இந்நிலையில், ஊழல் வழக்கில் நான்கு வருடம் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி., ரஷீத் மசூத்தின் எம்.பி., பதவியை பறிப்பதற்கான நடவடிக்கைகளை ராஜ்யசபா செயலகம் துவக்கியுள்ளது.

Comments