ஏற்காடு: ஓட்டுகளை கைப்பற்ற அ.தி.மு.க., - தி.மு.க., வியூகம் என்ன?

ஏற்காடு இடைத்தேர்தலில், ஏறுமுகமாக, 1 லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகளை பெறுவதற்கு ஆளுங்கட்சியும், 50 ஆயிரம் ஓட்டுகள் பெற்று, டெபாசிட்டை தக்க வைக்க தி.மு.க.,வும் திட்டமிட்டுள்ளது.
உத்தரவு:

ஏற்காடு இடைத்தேர்தல், டிசம்பர் 4ல் நடைபெறவுள்ளது. அத்தொகுதியில் ஆளுங்கட்சி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளதாலும், அ.தி.மு.க., இரண்டாக உடைந்த, 'ஜா' - 'ஜெ' என, இரு அணியாக போட்டியிட்ட போது, 'ஜெ' அணி வெற்றி பெற்றதால், அத்தொகுதியை எளிதாக கைப்பற்றலாம் என, ஆளுங்கட்சி கருதுகிறது. சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் 23ம் தேதியன்று, அமைச்சர்கள் கோட்டைக்கு வந்தால் போதும் என்றும், மற்ற நாட்களில் ஏற்காடு தொகுதியில், 1 லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகளை பெறுவதற்கான பூர்வாங்க பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட வேண்டும் எனவும், அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., வேட்பாளர் மாறன், கட்சிக்கு புதுமுகம் என்பதால், உள்கட்சி பிரச்னை அத்தொகுதியில் தலைதூக்கியுள்ளது. ஆளுங்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகளாக 25 ஆயிரம் கிடைத்தால், தி.மு.க.,வுக்கு மட்டுமே விழக்கூடிய 50 ஆயிரம் ஓட்டுகளையும் சேர்த்து ஆளுங்கட்சியின் வெற்றியை தட்டிப் பறிக்கலாம் என்ற கணக்கில் தான், தேர்தல் களத்தில் தி.மு.க., குதித்துள்ளது.

குழப்பம்:

இடைத்தேர்தல் மூலம், லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடும் மற்றொரு அரசியல் கணக்கையும், தி.மு.க., தலைவர் கருணாநிதி வகுத்துள்ளார். அதன் அடிப்படையில், அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கருணாநிதி ஆதரவு கேட்டு, கடிதம் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க.,வை ஆதரிக்க முடியாது என கூறிவிட்டன. காங்கிரஸ் போட்டியிடுவதா? தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்க முடியாத குழப்பத்தில் உள்ளது. கடந்த 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில், முன்னாள் தலைவர் தங்கபாலு போட்டியிட்டு, 8,000 ஓட்டுகளை மட்டும் ஏற்காடு தொகுதியில் பெற்றுள்ளார். 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தேவதாஸ், 3,500 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு 10 ஆயிரம் ஓட்டுகள் வரை தான் கிடைக்க வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.,வை பொறுத்தவரையில் இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., 10 ஆயிரம் ஓட்டுகள் பெற்றன. 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட இளைஞர் அணி மாநிலச் செயலர் சுதீஷ், 20 ஆயிரம் ஓட்டுகளை ஏற்காடு தொகுதியில் பெற்றுள்ளார். எனவே, இடைத்தேர்தலில் போட்டியிட்டால், டெபாசிட்டை பெற வேண்டும் என, தே.மு.தி.க., விரும்புகிறது.

கேள்விக்குறி:

ஏற்காடு மலையின் அடிவார பகுதிகளில், வன்னியர் சமுதாயத்தினரின் ஓட்டுகள் 35 ஆயிரம் உள்ளன. அந்த ஓட்டுகள் அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., மூன்று கட்சிகளுக்கும் பிரித்து விடுவதால், பா.ம.க.,வுக்கு மட்டும் 10 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு, தே.மு.தி.க.,வை விட குறைவான ஓட்டுகளை எடுத்தால், தன் கட்சியின் செல்வாக்கு பாதிக்கும் என்பதால், பா.ம.க., போட்டியிட தயக்கம் காட்டி வருகிறது. தமிழக பா.ஜ., கட்சிக்கு அத்தொகுதியில் 2,500 ஓட்டுகள் மட்டுமே உள்ளன. இந்த ஓட்டுகளை எந்த கட்சிக்கு பயன்படுத்துவது குறித்த இறுதி முடிவை இன்னும் அக்கட்சி அறிவிக்கவில்லை.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணிக்கு, 1 லட்சத்து 5,000 ஓட்டுகள் கிடைத்தன. தற்போது அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இல்லை என்பதால், கடந்த தேர்தலை விட கூடுதலாக 20 ஆயிரம் ஓட்டுகளை எடுக்க ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் சென்று வேட்பாளர் ஆதரவு கேட்பது, ஆளுங்கட்சிக்கு இணையாக பண பலத்திற்கு ஈடு கொடுப்பது, தி.மு.க., தலைவர் கருணாநிதியை ஒரு நாள் பிரசாரத்திற்கு அழைத்து செல்வது, கட்சியினரிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த, பொருளாளர் ஸ்டாலினுடன் தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரி, ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழி ஆகியோரை பிரசாரத்தற்கு அனுப்பி வைப்பது போன்ற சில திட்டங்களையும் தி.மு.க., வகுத்துள்ளது. வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என்றால், டெபாசிட்டையாவது தக்க வைக்க வேண்டும் என, தி.மு.க.,வினர் கங்கணம் கட்டியுள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments