தவிர்க்கும் முடிவு:
அடுத்த
மாதம், இலங்கையில் நடக்கும், காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை, இந்தியா
புறக்கணிக்க வேண்டும்; இந்தியாவின் சார்பில் யாரும், அதில் கலந்து
கொள்ளக்கூடாது. அது குறித்து, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம், வலியுறுத்தி
உள்ளார்.அதற்கு முன்பாக, இதே கோரிக்கையை, அவரது கூட்டணியில் உள்ள, விடுதலை
சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.அதன் தொடர்ச்சியாக,
கருணாநிதியும் அதை வலியுறுத்தியுள்ளதால், இந்த விவகாரத்தில், காங்கிரஸ்
கட்சி கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற
தமிழக கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை
பயணத்தை தவிர்க்கும் முடிவுக்கு வந்துள்ளதாக, தமிழக காங்கிரஸ் வட்டாரம்
தெரிவித்தது.
பணியக்கூடாது:
அதே
நேரத்தில், இந்தியாவின் சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான்
குர்ஷித் பங்கேற்கலாம் என்றும், காங்கிரசார் தெரிவித்தனர்.இந்த
விவகாரத்தில், அ.தி.மு.க., தி.மு.க., போன்ற கட்சிகளின் நெருக்கடிக்கு,
மத்திய அரசு பணியக் கூடாது என்றும், பிரதமர் இலங்கை மாநாட்டில் கலந்து
கொள்ள வேண்டும் என்றும், தமிழக காங்கிரஸ் வட்டாரம் கருதுகிறது.ஏனெனில்,
இலங்கையில் போருக்கு பிறகு, ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு, காங்கிரசும்,
மத்திய அரசும் தான் காரணம் என்றும், அவர்கள் கூறுகின்றனர்.சமீபத்தில்,
இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தல் நடந்தது. தமிழர்கள் அதிகம் வாழும் அந்த
பகுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, தமிழர் ஒருவர்
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த தேர்தல் நடத்தப்படுவதற்கும்,
தமிழர் கையில் ஆட்சி நிர்வாகம் வருவதற்கும், இலங்கைக்கு மத்திய அரசு
கொடுத்த, 'பிரஷர்' தான் முக்கிய காரணம் என்று, காங்கிரஸ் தரப்பில்
கூறப்படுகிறது. தேர்தல் நடத்தும் திட்டமே இல்லாமல் இருந்த இலங்கையை,
வழிக்கு கொண்டு வந்த மத்திய அரசு, இப்போது அடுத்த கட்டமாக, வடக்கு மாகாண
ஆட்சி நிர்வாகத்துக்கு, கூடுதல் அதிகாரம் பெற்றுத் தர வேண்டிய நிலையில்
இருக்கிறது. அதற்கான முயற்சிகளிலும் காங்கிரசும், அதன் தலைமையும்
ஈடுபட்டுள்ளன.இந்த நேரத்தில், 'இலங்கையை புறக்கணிக்க வேண்டும்; அங்கு
நடக்கும் மாநாட்டில், இந்தியாவின் சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது'
என, தி.மு.க., நெருக்கடி கொடுப்பது சரியா? நட்பு நாடாக இருக்கும்
இலங்கையின் பார்வையை சீனா, பாகிஸ்தான் போன்ற எதிரி நாடுகள் மீது திரும்ப
செய்யத் தான் தி.மு.க.,வின் வற்புறுத்தல்கள் உதவும் என்றும் அவர்கள்
குற்றம் சாட்டுகின்றனர்.
மறு பரிசீலனை:
அதற்கு ஆதாரமாக, ஐ.நா., சபையில், இலங்கைக்கான நிரந்தர உறுப்பினராக இருந்த டாயன் ஜெயதிலேகா, நேற்று முன்தினம், ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையை சுட்டிக் காட்டுகின்றனர். அதில், சூஇலங்கை விவகாரத்தில், இது போன்ற ஒரு புறக்கணிப்பு முடிவை, பிரதமராக இருந்த நேரு எடுத்தார். அப்போது, இலங்கையி்ன் முதல் பிரதமராக, சுதந்திரத்துக்கு பின் பொறுப்பேற்ற டி.எஸ்.செனநாயகா, நேரடியாக அமெரிக்காவுடன் கை கோர்த்தார். இப்போது, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே, நெருக்கமான உறவு இருப்பதால், இலங்கையால் அந்த முடிவை எடுக்க முடியாது. ஆனால், பாகிஸ்தான், சீனாவுடன் நிச்சயம் இலங்கையால் கை கோர்க்க முடியும்' என்று டாயன் ஜெயதிலேகா குறிப்பிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில், அ.தி.மு.க.,வை விட, தி.மு.க., மீது காங்கிரசுக்கு ஏன் கோபம் என்பதற்கும் காங்கிரஸ் தரப்பு விளக்கம் சொல்கிறது. 'பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன், அ.தி.மு.க., தலைமை நிறுத்திக் கொண்டது. ஆனால், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும்படி, அ.தி.மு.க., தலைமைக்கு, தி.மு.க., யோசனை சொல்வது மூலமாக, மத்திய அரசுக்கு, பெரிய நெருக்கடி கொடுக்க முனைகிறது. ஏற்காடு இடைத்தேர்தலுக்கு, ஆதரவு கேட்டு, கடிதம் எழுதி விட்டு, இதுபோன்ற நெருக்கடிகள் கொடுப்பதால், தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்கிறோம்' என, காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Comments