இடிந்தகரையை ஒட்டியுள்ள கடற்கரை
கிராமம் கூத்தங்குழியில், மீனவ மக்களில், போராட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிய
கவுன்சிலர் போஸ்கோ தரப்பினரும், எதிர்ப்பாக காந்தி தரப்பினரும் உள்ளனர்.
இரண்டு தரப்பினருக்கும்
இடையே அடிக்கடி மோதல்களும், வெடிகுண்டு வீச்சு
சம்பவங்களும் நடந்தன. கடந்த எட்டு மாதங்களாக நடக்கும் இந்த மோதலில் பலரும்
ஊரை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனர். அண்மையில் காந்தி தந்த புகாரின்
பேரில், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயக்குமார் உள்ளிட்ட 39
பேர் மீது, போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால்
இருதரப்பினருக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே இதனை
தவிர்க்க சப் கலெக்டர் ரோகிணி தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தினர். ஆனால்
அதில் போஸ்கோ தரப்பினர் பங்கேற்கவில்லை. நேற்று இடிந்தகரையில் உதயக்குமார்
தலைமையிலான போராட்டக்குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அணுஉலை
எதிர்ப்பு, தாதுமணல் ஆலை எதிர்ப்பு போன்றவற்றால் கடற்கரை கிராம மக்களிடையே
இரு தரப்பினராக மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கிராம மக்களிடம்
ஏற்படும் பிளவுக்கு போராட்டக்குழு காரணம் என சித்தரிக்கப்படலாம், எனவே
போராட்டத்தை முடித்துவிட்டு, சென்னையில் முதல்வரை சந்தித்து முறையிடலாமா என
பொதுமக்களிடம் கருத்துகேட்டுவருகின்றனர். எனவே இடிந்தகரை போராட்டத்திற்கு
முழுக்கு போடும் உதயக்குமார் குழுவினர் விரைவில் முதல்வரை சென்னையில்
சந்திக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
Comments