புற்றுநோய் சிகிச்சை பிரிவு துவங்க பிரியங்கா ரூ.50 லட்சம் நன்கொடை : பிரதமரானால் ஊழலை ஒழிப்பாராம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன் தந்தையின் நினைவாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில், புற்று நோய் வார்டு கட்டுவதற்கு, 50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 31. இவரின் தந்தை மது சோப்ரா, இந்திய ராணுவத்தின் மருத்துவ பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மது சோப்ரா, புற்று நோய் பாதிப்பு காரணமாக, சில மாதங்களுக்கு முன், இறந்தார். இந்நிலையில், புற்று நோய் பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக,
தன் தந்தையின் நினைவாக, பிரியங்கா சோப்ரா, அறக்கட்டளை துவக்கியுள்ளார். இந்த அறக்கட்டளை சார்பில், மும்பை புறநகர் பகுதியில் உள்ள, நானாவதி மருத்துவமனையில், புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும், வார்டை கட்டுவதற்காக, 50 லட்சம் ரூபாய், நன்கொடை அளித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா கூறியதாவது: என் தந்தையின் இழப்பு, என்னை மிகவும் பாதித்து விட்டது. புற்றுநோயால், என் தந்தை எந்த அளவுக்கு அவதிப்பட்டார் என்பது, எனக்கு தான், தெரியும். அதுபோன்ற நிலை, வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. இதனால் தான், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, என்னால் முடிந்த அளவு, உதவ முடிவு செய்துள்ளேன். அதன், முதல் கட்டமாகத் தான், இந்த நன்கொடையை அளித்துள்ளேன். ஊழலுக்கு எதிரான விஷயங்களிலும், ஆர்வம் காட்டி வருகிறேன். நான், பிரதமரானால், நாட்டிலிருந்து, ஊழலை அடியோடு ஒழிப்பேன். இவ்வாறு, பிரியங்கா கூறினார்.

Comments