உ.பி., மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில்,
தாண்டியா கேரா கிராமத்தில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த, கோட்டை உள்ளது.
ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆண்டபோது, இப்பகுதியில், குறுநில மன்னராக
இருந்தவர், ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங். இவர், ஜான்சி ராணி, லட்சுமி பாயுடன்
இணைந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக, கலகம் செய்ததால், 1857ம் ஆண்டு
தூக்கிலிடப்பட்டார். 'ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங்,
தாண்டியா கேரா
கிராமத்தில் உள்ள கோட்டையில், 1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளார்.
அதை அவர், என் கனவில் வந்து சொன்னார்' என, ஷோபன் சர்கார் என்ற சாமியார்,
சில வாரங்களுக்கு முன், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தப்
பகுதியில் பிரபலமான ஷோபன் சர்கார் சாமியார் இவ்வாறு சொன்னதால், உன்னாவ்
கோட்டையில், தங்கம் இருக்கிறதா என, ஆய்வு செய்ய, மத்திய அரசு, தொல்பொருள்
துறைக்கு உத்தரவிட்டது. தொல்பொருள் துறையினர் மேற்கொண்ட ஆரம்ப கட்ட
விசாரணையில், 'கோட்டையை சுற்றி பூமிக்கடியில், ஏதோ உலோகம் இருக்க வாய்ப்பு
உள்ளது' என, தெரிவித்தது. இதையடுத்து, உன்னாவ் கோட்டையை, அகழ்வாராய்ச்சி
செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தாண்டியா கேரா
கிராமத்தில், நேற்று முன்தினம், தொல்பொருள் துறை அதிகாரிகள், கோட்டையை
சுற்றி பள்ளம் தோண்டும் பணியை துவங்கினர். அகழ்வாராய்ச்சி பணி காரணமாக,
அப்பகுதிக்குள், பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடயம் இல்லை:
நேறறு வரை, 30 சதுர அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பள்ளம் தோண்டி கொண்டிருக்கின்றனர். இதுவரை புதையலுக்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. 'புதையல் உள்ளதா என்பதற்காக தோண்டும் பணி, ஒரு மாதம் காலம் நடக்கும். அதன் பிறகு தான், புதையல் உள்ளதா, இல்லையா என்பதை, தெளிவுப்படுத்த முடியும்' என, தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'மதச் சார்பற்ற காங்கிரஸ் அரசு, ஒரு சாமியார் சொன்னதற்காக, மக்கள் பணத்தை வீணடித்து, சுரங்கம் உள்ளதா என, தோண்டி பார்க்கிறது' என, ஒரு தரப்பு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு தரப்பில் குறிப்பிடுகையில், 'சாமியார் சொன்னார் என்பதற்காக, இந்த பணி மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே, தொல்பொருள் துறை இந்த பகுதியில், 5 முதல், 20 மீட்டர் ஆழத்தில், உலோகங்கள் இருப்பதற்கான தடயங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பரிந்துரையின்படி தான் தற்போது இந்த பணி நடக்கிறது' என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2,500 டன் தங்கம்:
கான்பூரில், ஆதம்பூர் கிராமத்தில் உள்ள மற்றொரு கோட்டையிலும் தங்கம் இருப்பதாகவும், அங்கு, 2,500 டன் வரை தங்கம் இருக்கக்கூடும், என, ஷோபன் சர்கார் சாமியார், கான்பூர் கலெக்டருக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
சவால்:
'தொல்பொருள் துறையினர் மேற்கொண்டுள்ள தங்கம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏமாற்றம் ஏற்பட்டால், அது தொடர்பாக, என் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க, 10 லட்சம் ரூபாய், டெபாசிட் செய்கிறேன்' என, ஷோபன் சாமியார் உறுதியளித்துள்ளார். 'சாமியார் சொன்னது நிச்சயம் பலிக்கும்... இதற்காக ஒருமாதமாவது பொறுத்திருக்க வேண்டும்' என, அவரது சீடர்கள் தெரிவித்துள்ளனர். 'சாமியார் சொன்னது போல தங்கம் கிடைத்து விட்டால், அந்த தங்கத்தில், 20 சதவீதம், இந்த பகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்' என, இப்பகுதி மக்கள் இப்போதே கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments