23ம் தேதி ‘குட்டி’ இளவரசருக்கு பெயர் சூட்டுவிழா... சிறப்பு தங்க, வெள்ளி நாணயங்கள் வெளியீடு

லண்டன்: இம்மாதம் 23ம் தேதி இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு நடைபெற இருக்கும் பெயர் சூட்டு விழா நினைவாக இங்கிலாந்தில் தங்க, வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேட் மிடில்டன்னை கடந்த 2011ம் ஆண்டு லண்டனில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தை உலக மக்கள் டிவியில் பார்த்து மகிழ்ந்தனர். இதையடுத்து கர்ப்பமான கேட் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஜார்ஜ் எனப் பெயரிடப்பட்ட அந்த குட்டி இளவரசரின் பெயர் சூட்டு விழா இம்மாதம் 23ந்தேதி அதிகாரப்பூர்வமான விழாவாகக் கொண்டாடப் பட இருக்கிறது. அதனையொட்டி அழகிய நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்... கேட்- வில்லியம் தம்பதிகள் தங்கள் முதல் வாரிசான குட்டி இளவரசருக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் எனப் பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

கிங் ஜார்ஜ் செவன்.... இக்குழந்தை அரச பரம்பரையின் 7ம் வாரிசு என்பதால் கிங் ஜார்ஜ் செவன் என்றும் அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெயர் சூட்டு விழா.... இந்நிலையில் வரும் 23ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்த அரச தம்பதிகள் முடிவு செய்துள்ளனர்.

வரும் 23ம் தேதி... இந்தப் பெயர் சூட்டு விழா, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள ராயல் சேப்பலில் கான்டர்பெர்ரி பேராயரான ரெவ்.ஜஸ்டின் வெல்பியால் வரும் 23ஆம் தேதியன்று நடத்தப்பட உள்ளது.

திருவிழா... பொதுவாகவே அரச குடும்பத்து விழாக்கள் திருவிழாவாக பொதுமக்களால் குதூகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தப் பெயர் சூட்டு விழாவின் நினைவாக நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நாணய வடிவமைப்பு... இந்த நாணயத்தின் வடிவமைப்பு, அளவுகள், பொருட்கள் போன்றவை குழந்தையின் பெற்றோர் மற்றும் பாட்டி இரண்டாம் எலிசபெத் ஆகியோரால் முடிவு செய்யப்பட்டது.

பொதுமக்கள் வசதிக்காக... பொதுமக்கள் எளிதாக வாங்கக்கூடிய 21 டாலர் மதிப்பில் உள்ள 13 பவுண்ட் காசிலிருந்து தொடங்கி ஒரு கிலோ தங்க மதிப்புள்ள (80,000 டாலர்) 50,000 பவுண்ட் மதிப்பு வரை காசுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன.

விழா நினைவாக.... நரம்பால் இசைக்கப்படும் யாழில் விளையாடும் இரண்டு தேவர்கள் புடைசூழ 2013 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் பிறந்த இளவரசர் ஜார்ஜின் பெயர்சூட்டு விழாவின் நினைவாக என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி நாணயம்.... இதுதவிர ஒரு சிறப்பு வெள்ளி நாணயமும் அவரது பிறப்பைக் குறிப்பிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாவது தலைமுறை.... இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம்சிற்குப் பின் அரியணைக்கு வரும் மூன்றாவது அரச குடும்பத்து வாரிசு இந்தக் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments