கடந்த சில மாதங்களாகவே வெங்காய விலை கண்ணை பிழிந்து வருகிறது. விவசாயிகள்
இப்போதாவது அதிக விலை பெறட்டுமே என்று மத்திய விவசாய துறை அமைச்சர்
சரத்பவார் தெரிவித்திருந்தார். இந்த விலை இன்னும் உயர பறக்க
துவங்கியிருக்கிறது.
டில்லியில் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மார்கெட்
பகுதிகளில் வெங்காயம் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டுள்ளனர். தற்போது ரூ.
80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில மற்ற
நகரங்களில் கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பீகாரில் ஒரு
கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து டில்லி வியாபாரிகள் கூறுகையில்; வெங்காயம் விளைச்சல் உள்ள
பகுதியில் இருந்து டில்லிக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை
உயர்த்த வேண்டியதாகவுள்ளது என்றனர் . தீபாவளிக்கு கிலோ 120 வரை வரலாம் என
டில்லி வியாபாரிகள் கூறுகின்றனர்.
வெங்காயம் பதுக்கல் : விலை
உயர்வு குறித்து வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில்; இந்த
தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. வெங்காயம் பதுக்குவோர் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து மத்திய உணவு துறை
அமைச்சர் தாமஸ் கூறுகையில்; வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க
முடியாது. ஏற்றுமதியை குறைப்பதால் ஒன்றும் விலையை கட்டுப்படுத்த முடியாது.
அதே நேரத்தில் ஏற்றுகுமதிக்கான வரியை வேண்டுமானால் அதிகரிக்க செய்யலாம்.
எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகப்படுத்தவும்
முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய
அமைச்சகம் வரும் 25 ம் தேதி ஆலோசிக்கவுள்ளதாக டில்லி வட்டாரம்
தெரிவிக்கிறது. மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் கண்காணிக்க வேண்டும் என்று
மத்திய அரசு கேட்டுள்ளது.
மகாராஷ்ட்டிராவில் இருந்து வெங்காயம்: மத்திய உணவு துறை அமைச்சர் தாமஸ், மத்திய விவசாய துறை அமைச்சருடன் வெங்காயம் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார், இதற்கிடையில் டில்லியில் கடும் தட்டுப்பாட்டை சமாளிக்க மகராஷட்டிர மாநிலத்தில் இருந்து அனுப்பி வைக்குமாறு அம்மாநில முதல்வவர் பிரிதிவ்ராஜ் சவானிடம் அமைச்சர் தாமஸ் கேட்டு கொண்டுள்ளார்.
Comments