அதற்கு நேர்மாறாக, தலா, 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்க, ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்தனர் என்ற, மாநாட்டுக்கு முந்தைய நாள் தகவலே, தமிழக கட்சிகளை மோடி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது.பா.ஜ., தேர்தல் பிரசாரக் குழு தலைவராக, மோடியை நியமித்த போது, வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க., தலைமையிடம் காணப்பட்ட வரவேற்பு, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது காணாமல் போனது. லோக்சபா தேர்தல் குறித்து, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. ஆளும் அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில், சமீப காலமாக, அக்கட்சியினர், ‘வருங்கால பிரதமர்’ என்று முதல்வர் ஜெயலலிதாவை அழைத்து வருகின்றனர். 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசையும், சூளுரையும், அதற்கு வித்திடுவதாகவே அமைகிறது.எனவே, தேர்தலுக்கு முன், மோடியை ஆதரிக்கும் நிலையை எடுக்க, அ.தி.மு.க., தயாராக இல்லை. அதை ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனல்களில், மோடியின் திருச்சி கூட்டத்துக்கு முக்கியத்துவம் தராததில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அதை மோடியும் உணர்ந்தே இருக்கிறார் என்பது, அவரது பேச்சில் புலப்பட்டது. ஐதராபாத் கூட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியைப் புகழ்ந்த மோடி, திருச்சியில், திரும்பிப் பார்க்க மறுத்து விட்டார்.ஆனாலும், ஆளும் கட்சி வட்டாரத்தில், மோடியின் வருகை, தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், உளவுத் துறை அறிக்கை. மோடி வருவதற்கு முன், மூன்று நாட்களாக, தமிழகம் முழுவதும் உளவுத் துறையினர் அதிரடி ஆய்வு செய்துள்ளனர்.அதன் அடிப்படையில், அவர்கள் அளித்த அறிக்கையில், ‘மூன்று நாட்களாகவே, கிராமங்களில்கூட மோடி பற்றிய விவாதம், பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது. ‘இவருக்கு ஒரு வாய்ப்பு தந்தால் என்ன’ என்ற சிந்தனை, சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க.,வைப் பற்றி மோடி விமர்சிக்க மறுத்துவிட்டது ஏன் என்ற கேள்வி, ஒரு தரப்புக்கு திடீர் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய அரசின் ஊழல் விவகாரங்களை விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்ட மோடி, அதன் பழைய,` பார்ட்னரான' தி.மு.க.,வை சீண்டவில்லை. அதற்கு காரணம், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்காக இருக்கலாம் என, அரசியல் வட்டாரம் சொல்கிறது. ஆனால், தமிழக பா.ஜ., வட்டாரம் அதை மறுக்கிறது. ‘மோடி, ஒரு பிரதமர் வேட்பாளர். அதனால், தேசிய அரசியலை பேசுவது மட்டுமே பொருத்தமாக இருக்கும். தி.மு.க., – அ.தி.மு.க.,வை விமர்சித்தால், அது மாநில அரசியலுக்குள் மூக்கை நுழைக்கும் செயல். அதை மோடி விரும்பவில்லை. காங்கிரசுக்கும், தமக்குமே போட்டி என்று கருதுகிறார். அதன் காரணமாகவே, மாநில அரசியலை அவர் தொடவில்லை’ என்று அக்கட்சி விளக்கம் சொல்கிறது. இவர்கள் இப்படி விளக்கம் சொன்னாலும் கூட, தி.மு.க.,விலும் ஒரு தரப்பினர், மோடிக்கு ஆதரவாக, தலைமையிடம் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில், மோடிக்கு காணப்படும் ஆதரவை பார்த்த, தி.மு.க., தலைவரின் குடும்பத்தினரும், மோடி பக்கமே நிற்பதாக, அறிவாலய வட்டாரம் அடித்துச் சொல்கிறது.
‘குறிப்பாக, கருணாநிதி குடும்பத்தில் உள்ள இளைஞர் எல்லாரும் சமூக வலைதளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். அவர்கள், மோடிக்கு ஆதரவு பெருகி வருவதை, அடிக்கடி, கருணாநிதியிடம் கூறி வருகின்றனர்’ என்று அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.‘அதனால் தான், மோடி, பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டபோது, பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, ‘வாழ்த்துக்கள்’ என்று, கருணாநிதி பட்டும் படாமலும் பதில் தெரிவித்திருந்தார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து, எந்த விமர்சனமும் இதுவரை செய்யாமல் இருந்து வருகிறார்’ என்றும் அவர் மேலும் கோடிட்டு காட்டினார்.இப்போது, திருச்சியில், தி.மு.க.,வைப் பற்றிய எந்த விமர்சனமும் மோடியின் பேச்சில் இல்லை என்பதும், அறிவாலயத்துக்கு ஆறுதலை அளித்துள்ளது என்றார்.
இதற்கிடையில், தி.மு.க., – அ.தி.மு.க., என எந்த பக்கமும் போகாமல், பா.ஜ., தலைமையில், மூன்றாவது அணி அமைக்கலாமா என்ற யோசனையில் உள்ள, தே.மு.தி.க., – ம.தி.மு.க., போன்ற கட்சிகளுக்கும், மோடிக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.காங்கிரசும், பா.ஜ.,வும் மாறி மாறி துாது விடும் ஒரே கட்சி தே.மு.தி.க., தான். சமீபத்தில் இக்கட்சித் தலைவர் விஜயகாந்தை, பா.ஜ., துாதர் சந்தித்து பேசியுள்ளார்.அப்போது பிடி கொடுக்காத விஜயகாந்த், இப்போது காங்கிரஸ் மீதான பார்வையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ளதாக தெரிகிறது.
ஆரம்பத்தில் அ.தி.மு.க., அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர் வைகோ. அவர் சென்னையில், ‘டிவி’யில் மோடி பிரசார நிகழ்ச்சியைப் பார்த்தபோது, உடனிருந்த கட்சியினரிடம், வெளிப்படையாகவே, தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். பா.ஜ., அணியில் சேர்வதே, வெற்றியைக் காண ஒரே வாய்ப்பு என்ற எண்ண ஓட்டம், ம.தி.மு.க.,வுக்கு வந்து விட்டது என்றே அக்கட்சி வட்டாரம் கூறுகிறது.
Comments