லோக்சபா தேர்தல் நடக்க, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,
தமிழக பா.ஜ.,வும் தன்னால் முடிந்தளவு, லோக்சபா தேர்தலில் எம்.பி.,க்களை பெற வேண்டும் என, வியூகம் வகுக்கிறது. பா.ஜ.,வின் கொள்கைகளுக்கு ஒத்துவரும், கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என, ஏற்கனவே அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், "மோடியின் தலைமையில் மத்திய அரசு அமைய, நடிகர் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள நடிகர்கள், பிரபலங்களை தன் பக்கம் ஈர்க்கும் வேலையை, காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. பா.ஜ.,வுக்கு அந்த எண்ணம் உள்ளதா என, கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, நடிகர் ரஜினியை நாங்கள் மதிக்கிறோம். அவர், நடிகர் என்பதை விட, தேசியத்தின் மீதும் ஆன்மிகத்தின் மீதும் அதிக பற்றுக் கொண்டவர் என்பதால், மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்.அவர், மோடி தலைமையிலான அணியை ஆதரிக்க வேண்டும் என, கேட்கிறோம். மோடி, திருச்சியில் இம்மாதம், 26ம் தேதி நடக்கும், பா.ஜ., "இளம் தாமரை' மாநாட்டில் பங்கேற்கிறார். அதில், ரஜினியும் பங்கேற்க வேண்டும் என, அவரை நேரில் அழைக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில், 1996ல் நடந்த, தமிழக சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார். அக்கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.ஆனால், இதையெல்லாம் ரஜினி ஏற்கவில்லை. அவர் அரசியலை விட்டு விலகியே நிற்கிறார். தற்போது, தமிழக பா.ஜ.,வின் கோரிக்கையை அவர் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என, அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
Comments