“ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்

புதுடில்லி: பிரதமர் நடவடிக்கை குறித்து ராகுல் விமர்சித்தது படு மோசமானது, எதிர்கட்சிகள் கூட இப்படி ( நான்சென்ஸ் ) என்று திட்டவில்லை . ராகுலின் இந்த விமர்சனத்திற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். அவரது நிலையை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றும், பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் பா.ஜ., கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

கிரிமினல் குற்றவாளிகளான மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது, அரசு தரும் படி பெற முடியாது, உள்ளிட்ட சட்ட திட்டம் அடங்கிய உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. இதனையடுத்து அரசியல் பிரதிநிதிகளை காப்பாற்றும்
விதமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அவசர சட்டமாகவும் அமைச்சரவை பிறப்பித்தது. தற்போது இது தற்போது ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.


இந்நிலையில் காங்., துணை தலைவர் ராகுல் மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டத்தை கிழித்து தூக்கி எறிய வேண்டும். இதில் அரசு செய்தது எல்லாம் முட்டாள்த்தனம் ( நான்சென்ஸ் ) என விமர்சித்தார். பிரதமர் வெளிநாடு சென்ற நேரத்தில் ராகுல் இவ்வாறு பேசியதற்கு பல்வேறு மத்திய அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர்கட்சியினர் இது பிரதமரை கேவலப்படுத்தும் செயல் என எதிர்கட்சியினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரவிஷங்கர் பிரசாத் கூறுகையில்: இந்த அவசர சட்டத்தில் இத்தனை நாள் எடுக்கப்பட்ட நடவடிக்கையை பார்த்து கொண்டு இருந்து விட்டு தற்போது ராகுல் இவ்வாறு காலம் தாழ்த்தி பேசுவது ஏன் ? இதன் மூலம் ஒபாமாவை சந்திக்க இருந்த சில மணி நேரத்திற்கு முன்னதாக ராகுலால் பிரதமர் கேவலப்படுத்தப்பட்டுள்ளார். எதிர்கட்சிகள் கூட பிரதமர் முடிவை இப்படி ‘நான்சென்ஸ்’- என்று விமர்சிக்கவில்லை. ராகுலின் விமர்சனத்தின் படி பிரதமர் தனது நிலையை என்னவென்று விளக்க வேண்டும். பிரதமர் இதனை ஏற்று பதவி விலக வேண்டும் . இவ்வாறு ரவிஷங்கர் பிரசாத் கூறினார்.

பா.ஜ., மூத்த நிர்வாகிகளில் ஒருவரான வெங்கையா நாயுடுவும் இதனையே வலியுறுத்தியுள்ளளார்.

Comments