திருச்சியில் மோடி பொதுக்கூட்டம்: ஆன்-லைனில் பதிவு செய்யலாம்

திருச்சியில் இம்மாதம், 26ம் தேதி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்க, ஆன்-லைனில் முன் பதிவு செய்யும் முறையை, திங்கள்கிழமை, தமிழக பா.ஜ., அறிமுகம் செய்கிறது.

குஜராத் முதல்வரும், லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., பிரசார குழு தலைவருமான மோடி, தேர்தல் பிரசாரத்தை, ஐதராபாத்தில் கடந்த மாதம் துவங்கினார்.
அவரது பொதுக் கூட்டத்துக்கு, நுழைவு கட்டணமாக, ஐந்து ரூபாய் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் பிரசாரத்தை துவங்கும் வகையில், திருச்சியில் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. இதற்கு நுழைவு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்க, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும், கூட்டத்தில் அமருவதற்கான இருக்கையை உறுதி செய்ய, ஆன்-லைனில் முன் பதிவு செய்துகொள்ளும் முறையை அறிமுகப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து, பா.ஜ., மாநில செயலர் வானதி சீனிவாசன் கூறியதாவது:கூட்டத்துக்கு வருவோர், அவர்களது இருக்கையை அறிந்து கொண்டு, வசதியாக அமர்ந்து தலைவர்களின் பேச்சை கேட்க இம்முறை உதவியாக இருக்கும். உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் தலைவர்களின் கூட்டங்களில், கெடுபிடி இருக்கும்.இந்நிலையில், இருக்கையை உறுதி செய்துகொள்வது, பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு கூடுதல் வசதியாக இருக்கும்.ஆன்-லைன் பதிவு முறை, திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்படுகிறது. அப்போது, ஆன்-லைன் முகவரி மற்றும் முன்பதிவுக்கான விவரங்கள் வெளியிடப்படும்.இவ்வாறு, வானதி சீனிவாசன் கூறினார்.

இதற்கிடையே, லோக்சபா தேர்தலுக்காக, தேர்தல் அறிக்கைக் குழு, எதிர்கால கணிப்பு மற்றும் திட்டமிடல் குழு, ஓட்டுச்சாவடி குழு, தொகுதி மேம்பாட்டுக் குழு, வாக்காளர் சந்திப்பு குழு உள்ளிட்ட, 16 குழுக்களையும், அதற்கான பொறுப்பாளர்களையும், தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ளது.

Comments