''கேழ்வரகில் நெய் வடியுதாம்- கேளுங்கள் தமிழர்களே!''

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனது டெல்லி உரையில் "தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது" என்று குறிப்பிட்டிருப்பது, எந்த அளவுக்கு உண்மை நிலைக்கு மாறானது என்பதைத் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் நன்கறிவர். செடி கொடிகள் சாய்ந்து, காய்ந்து, மரங்களனைத்தும் பட்டுப் போய், வேலி உடைந்து, கொலைகாரர் களும், கூலிப்படையினரும், கொள்ளைக்காரர்களும் குடியேறி, பாம்புகளும், பூரான்களும், தேள்களும் நெளிந்திடும் "பூங்கா"வை, அமைதிப் பூங்கா என்றால், நம்புவதற்கு நாமென்ன நனவிழந்து விட்டோமா? என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. முதல்வரின் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் முதல்வர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

அறிக்கை படித்த அமைச்சர்
 
23-9-2013 அன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் வழக்கம்போல் மத்திய அரசைத் தாக்கித் தயாரிக்கப்பட்ட முதல் அமைச்சரின் உரையை, அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் அங்கே சென்று படித்திருக்கிறார். அந்த உரையில், "தமிழ்நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது, அதனால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாக தேசிய அளவில் பேசப்படுகிறது" என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு பக்கத்திற்கு விரித்து எழுதியிருந்தேன்
 
நான் கடந்த 21-9-2013 அன்றுதான் தமிழகக் காவல் துறை பற்றியும், சட்டம் ஒழுங்கு எவ்வாறு தமிழகத்திலே சிதைந்து சீர்கெட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் என்னுடைய சொந்தக் கருத்தினை அல்ல; பல்வேறு இதழ்களில் வந்துள்ள செய்திகளையெல்லாம் தொகுத்து ஒரு பக்க அளவிற்கு விரிவாக எழுதியிருந்தேன். தற்போது முதல் அமைச்சரின் டெல்லி உரையைப் பார்க்கும்போது, தமிழகத்திலே வெளி வரும் இந்த ஏடுகளை எல்லாம் முதல் அமைச்சர் படிக்கவில்லையோ; நாட்டின் நிலைமைகளை நன்கு புரிந்து கொள்ளவில்லையோ; என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.
 
நேற்று நடந்த சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகளைப் பாரீர்
 
"சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது - டெல்லி தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் ஜெயலலிதா உரை" என்ற தலைப்பில் முதல் 2 அமைச்சரின் நீண்ட உரையை எழுத்துப் பிசகாமல் வெளியிட்டுள்ள தமிழக நாளேடுகளில் நேற்று முதல் நாள் மாலையிலும், நேற்று காலையிலும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக என்னென்ன செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன்.

சென்னையில் டாக்டர் படுகொலை
 
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் மருத்துவராகப் பணி புரிந்த டாக்டர் சுப்பையா, கடந்த 14ஆம் தேதி அபிராமபுரம் பில்ராத் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் புறப்படுவதற்காகக் காரில் ஏறினார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கும்பல் டாக்டர் சுப்பையாவை சரிமாரியாக அரிவாளால் வெட்டியது. 27 வெட்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

செம்மஞ்சேரியில் 2 கொலை
 
சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஆட்டோவின் பின்னிருக்கையில் ரத்தக் காயங்களோடு வாலிபர் ஒருவர் மயங்கிக் கிடந்திருக்கிறார். சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் ஆட்டோ டிரைவர் சசிபாலன் என்று தெரிந்திருக்கிறது. அதே செம்மஞ்சேரியில் கட்டிடத் தொழிலாளியான வேல்முருகன் என்பவரும் கொலை செய்யப்பட்டு முட்புதரில் பிணமாகக் கிடந்திருக்கிறார். சென்னைக்கு அருகில் மாங்காடு அருகே தொழிலதிபரும், அ.தி.மு.க. கிளையின் துணைச் செயலாளராகவும் உள்ள சேனு என்பவர் நேற்று முன்தினம் காலையில் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சேலத்தில் மூதாட்டி கொலை
 
சேலத்தில் மூதாட்டி சரஸ்வதியைக் கொன்று 50 பவுன் கொள்ளை. மதுரையில் 23ஆம் தேதி காலையில் வெங்காய வியாபாரி பாண்டி என்பவர், மாநகராட்சி தி.மு.க. கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே. குருசாமியின் தங்கை கணவர், நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

பாரிமுனையில் பார்வையற்றவர்கள் கைது
 
பாரிமுனையில் பார்வையற்றவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எட்டாவது நாளாக அவர்களின் போராட்டம் தொடருகிறது.

ராமதாஸ் மீது அவதூறு வழக்குகள்
 
ஜெயலலிதா சார்பில் டாக்டர் ராமதாஸ் மீது 3 அவதூறு வழக்குகள் - இவை நேற்று மட்டும் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை. இதற்கு முன்பு எத்தனை வழக்குகளோ? இதுவரை என் மீது 12 அவதூறு வழக்குகள்.

பிரேமலதா மீதும் வழக்குகள்
 
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது 34 அவதூறு வழக்குகளாம்! அவர் துணைவியாரையும் அவதூறு வழக்குகள் துரத்துகின்றன போலும்! பத்திரிகை களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

தமிழகம் அமைதிப் பூங்காவாம் தமிழகம் அமைதிப் பூங்காவாம்! 
 
திருவள்ளூரில் நேற்று முதல் நாள் இரவு வியாபாரம் முடிந்த பிறகு நடராஜ் என்பவர் தன்னுடைய ஜவுளிக் கடையைப் பூட்டி விட்டுச் சென்றவர், நேற்று காலையில் கடையின் முன் பக்க ஷட்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பணப் பெட்டி உடைந்தும், துணிகள் சிதறிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். பணப் பெட்டியிலே இருந்த ஒன்பது லட்சம் 3 ரூபாயைக் காணவில்லை. விலை உயர்ந்த துணிகளை யெல்லாம் மூட்டை கட்டி அள்ளிச் சென்று விட்டனராம்.

ஐந்து கடைகளில் கொள்ளை
 
நீலாங்கரை - ஈஞ்சம்பாக்கம் பகுதியில் ஐந்து கடைகளை உடைத்து ஒன்றரை இலட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாக வியாபாரிகள் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் அறிவித்துள்ள போராட்டம்
 
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பாக மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டுமென்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி 25ஆம் தேதி முதல் ஆசிரியர் தொடர் மறியல் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.

நீதிபதியே சிபிஐ விசாரணை கேட்கிறார்
 
மணல் திருட்டு விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் அவர்களே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டு, அதை எதிர்த்துத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டிருக்கிறது.

பாஜக பேனர்கள் கிழிப்பு
 
திருச்சியில் பா.ஜ.க. மாநாட்டில் நரேந்திர மோடி கலந்துகொள்வது பற்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

பெண்ணிடம் செயின் பறிப்பு
 
கும்மிடிப்பூண்டி அருகே ஐம்பது இலட்ச ரூபாய் நில மோசடி - எட்டு பேர் மீது புகார். தாம்பரத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி செயின் பறிப்பு - செம்மரக் கட்டைகளை கடத்தும் கும்பல் - 54 லட்சம் தங்கம் கடத்திய 3 பேர். மத்திய அமைச்சர் பெயரைச் சொல்லி வேலை வாங்கித் தருவதாக 33 லட்சம் ரூபாய் மோசடி.

பன் சேகரின் அட்டகாசம்
 
துரைப்பாக்கத்தில் பன் சேகர் என்ற ரவுடி மது அருந்தி விட்டு அந்தப் பகுதியில் நடந்து செல்கிற பெண்களைக் கேலி செய்து வம்புக்கு இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்து கொண்டிருந்த செல்வம் என்பவரிடமும் வம்பு இழுத்து அவரைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதுபற்றி செல்வம் காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில், காவல் துறையினர் பன் சேகரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

ரவுடியைக் காக்கும் அதிமுக செயலாளர்
 
அப்போது ரவுடி பன் சேகரின் உறவினரான தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விருகை ரவி தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பன் சேகரை அழைத்துக் கொண்டு போய் விட்டார். (காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட் டிருப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார் அல்லவா? இதுதான் காவல் துறையினருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட இலட்சணம்!)

அமைச்சர்கள் மீது கொலை வழக்கு
 
சேலம் சிறையில் சுகுமார் என்ற கைதி இறந்த விவகாரத்தில் அமைச்சர்கள் மீது கொலை வழக்கு மனு விசாரணை தள்ளிவைப்பு - உயர் நீதிமன்றம் உத்தரவு. காட்பாடி அருகே வீடு மீது குண்டு வீச்சு - 3 பேர் தலை மறைவு.

எம்.எல்.ஏ கைது, மனைவி தலைமறைவு
 
பேனர் கிழிப்பால் மோதல் - கடலூரில் கடைகள் அடைப்பு. திருப்பரங்குன்றம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. கைது - மனைவி தலை மறைவு. பொன்னேரி காவல் நிலையத்தில் ஆர்த்தி என்ற பெண் தீக்குளிக்க முயற்சி. எர்ணாவூரில் கழுத்தை நெரித்து மனைவி நதியா கொலை.

ஒரே நாளில் நடந்தவை இவை
 
ஒரே நாளில் ஏடுகள் சிலவற்றில் வெளிவந்த தலைப்புச் செய்திகளைத்தான் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இதே நிலை தான். இதெல்லாம் நாட்டின் தலைநகரத்திலே - யாருக்குத் தெரியப்போகிறது என்ற எண்ணத்தோடுதான் தமிழக முதல் அமைச்சர், "தமிழ் நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராகப் பராமரிக்கப் படுகிறது; அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது" என்று டெல்லி பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார்.

சிறுபான்மையினர் ஆணையம்
 
மேலும் முதலமைச்சர் உரையில், "தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவற்றின் மூலமாக சிறுபான்மையினரின் நலன்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் குறிப்பிடும் "தமிழ்நாடு சிறுபான்மை யினர் ஆணையம்" என்பது தமிழகத்தில் முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் 13-2-1989 அன்று தொடங்கப்பட்டது. "தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகமும் 1-7-1999இல் தி.மு. கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.

முக்கியத்துவம் குறைந்தது
 
 
ஆனால் அடுத்து அ.தி.மு.க. ஆட்சி பதவிக்கு வந்த போது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தோடு ஒன்றாக இணைத்து, இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டார்கள். ஆனால் 2006இல் தி.மு.கழக அரசு மீண்டும் அமைந்தவுடன், "தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை" தனியே செயல்படும் வகையில் உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மையினத்தவருள் தொழில் முனைவோர் சிறு தொழில் மற்றும் குறுந்தொழில் தொடங்க கடன் உதவிகள் எல்லாம் வழங்கப்பட்டன.

பெரிதாகப் பேசுகிறார் ஜெயலலிதா
 
அடுத்து முதலமைச்சர் உரையில் சிறுபான்மையினர் நல இயக்ககம் பற்றியும் பெரிதாகக் கூறியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனியாக ஓர் இயக்குனரகம் முதலில் 1969இல் தி.மு. கழக ஆட்சியில்தான் தொடங்கப் பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனியே ஓர் அமைச்சரை நியமித்ததும், அதற்கென மானியக் கோரிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியதும் 1971ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியிலே தான். அதைப்போலவே சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்கு அரசின் தனிக் கவனம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்கென ஒரு தனி இயக்குனரகம் அமைக்கப்படும் என்று 2007-2008ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கழக அரசு அறிவித்ததற்கிணங்க, "சிறுபான்மையினர் நல இயக்ககம்"" ஒன்றினை அமைத்திட அனுமதித்து 6-4-2007இல் ஆணையிடப்பட்டது. இவ்வளவையும் மறைத்துவிட்டு, முதலமைச்சர் உரையில், சிறுபான்மையினரின் நலன்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறியிருப்பது எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கொலைகாரர்களும், கூலிப்படையினரும்
 
முதலமைச்சர் ஜெயலலிதா தனது டெல்லி உரையில் "தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது" என்று குறிப்பிட்டிருப்பது, எந்த அளவுக்கு உண்மை நிலைக்கு மாறானது என்பதைத் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் நன்கறிவர். அச்ச உணர்வின் காரணமாக, வெளிப்படையாகச் சொல்வதற்குப் பலருக்கும் தயக்கம்! ஜனநாயகக் கடமை ஆற்றிட வேண்டிய பத்திரிகைகளுக்கோ பெரும் பயம்! செடி கொடிகள் சாய்ந்து, காய்ந்து, மரங்களனைத்தும் பட்டுப் போய், வேலி உடைந்து, கொலைகாரர் களும், கூலிப்படையினரும், கொள்ளைக்காரர்களும் குடியேறி, பாம்புகளும், பூரான்களும், தேள்களும் நெளிந்திடும் "பூங்கா"வை, அமைதிப் பூங்கா என்றால், நம்புவதற்கு நாமென்ன நனவிழந்து விட்டோமா? கேழ்வரகில் நெய் வடிகிறதாம்; கேளுங்கள் தமிழர்களே என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Comments