ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீஸர் செப்-9-ல் வெளியீடு!!

Kochadaiyaan First teaser to be released on Sep 9மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ரஜினியின், கோச்சடையான் படத்தின் முதல் டீஸர் வருகிற செப்டம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் இயக்குநர் செளந்தர்யா டுவிட்டரில் கூறியுள்ளார். எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து நடித்துள்ள படம் கோச்சடையான். அனிமேஷன் படமாக 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி
வருகிறது. மேலும் அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் மோஷன் கேப்டசரிங் தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தில் ரஜினி அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ருக்மணி, ஷோபனா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடாக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முன்னதாக இப்படத்‌தின் டிரைலர் வெளியீட்டை சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் டிரைலர் எதிர்பார்த்தபடி வராததால் அந்த முடிவை கைவிட்டனர். இதனிடையே இப்படத்தின் டிரைலரோ, இசை வெளியீடோ எப்போதும் நடக்கும் என்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், படத்தின் முதல் டீசர் இன்னும் ஒருவார காலத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநரும், நடிகர் ரஜினியின் மகளுமான செளந்தர்யா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, கோச்சடையான் படத்தின் டீஸர் வரும் செப்., 9ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நேரத்தில் இதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Comments