மின் உற்பத்தியில் தன்னிறைவை எட்டாத தமிழகம்: 55 ஆண்டுகளாகியும் பின்தங்கிய மின் வாரியம்

தமிழக மின் வாரியம் துவங்கி, 55 ஆண்டுகள் ஆகிய நிலையில், மின் உற்பத்தியில், இன்னமும் தன்னிறைவு எட்டவில்லை; அதே நேரம், தமிழகத்தின் தனிநபர் மின் நுகர்வு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வது, அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், புதிய மின் திட்டங்களை உருவாக்கி, மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், தமிழகத்தில், 1957ல், மின் வாரியம் அமைக்கப்பட்டது.
அப்போது, தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன், 256 மெகா வாட் ஆக இருந்தது.மாநிலம் முழுவதும், 89 துணை மின் நிலையங்கள், 3,773 டிரான்ஸ்பார்மர் இருந்தன. 4.30 லட்சம் மின் நுகர்வோர் மட்டுமே இருந்தனர். தனிநபர் மின் நுகர்வு, 21 யூனிட்டாக இருந்தது. அதன் பின், தமிழகத்தில், தொழிற்சாலைகள், வீடுகள் எண்ணிக்கை அதிகரித்தது.அதற்கேற்ப, மின் தேவையை சமாளிக்க, புதிய மின் திட்டங்கள் துவங்கப்பட்டன. மின் வாரியம் துவங்கி, 55 ஆண்டு ஆகிய நிலையில், மின் வாரியமும், மின் கழகமாக மாற்றப்பட்ட நிலையில், தமிழகத்தின் தற்போதைய மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன், 10,500 மெகா வாட் ஆக உள்ளது. தற்போது, மாநிலம் முழுவதும், 2.40 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.நடப்பாண்டு, தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை, 12,036 மெகா வாட் ஆக உயர்ந்துள்ளது. அரசு, பொதுமக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கியது, தொழிற்சாலை அதிகரிப்பு ஆகியவற்றால், மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், 1,040 யூனிட் ஆக இருந்த தனிநபர் மின் நுகர்வு, நடப்பாண்டு, 1,100 யூனிட்டை தாண்டியிருப்பது, மின் கழக அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.ஆண்டுதோறும், தமிழகத்தின் மின் தேவை, 300 முதல், 500 மெகா வாட் வரை, அதிகரிக்கிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, தென்மேற்கு பருவக்காற்று சமயம் காற்றாலைகள் உபயத்தால், மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவை எட்டி, மின் தேவையையும் பூர்த்தி செய்கிறது.இதர மாதங்களில் மின் பற்றாக்குறை ஏற்படுவதால், மின் தடை செய்யப்படுகிறது. காற்றாலைகளின் மின் உற்பத்தி, நேற்று காலை, 16 மெகா வாட் ஆக சரிந்தது. தமிழகத்தின் மின் தேவை, 10,640 ஆக இருந்த நிலையில், 9,211 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது.இதனால், 1,429 மெகா வாட் மின் பற்றாக்குறையை சமாளிக்க, பகல் மற்றும் இரவில், நான்கு மணி நேரத்துக்கும் மேல் மின் தடை ஏற்படுகிறது.மின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில், இதே நிலை நீடித்தால், தமிழகம் மின் உற்பத்தி மற்றும் தேவையில், தன்னிறைவு அடைய, மேலும் சில ஆண்டு ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக மின் வாரியம் துவங்கி, 55 ஆண்டு ஆகிய நிலையில், இன்னமும் மின் உற்பத்தி, வினியோகத்தில் தன்னிறைவு அடையாதது, மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments