யோசனை! காஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரை உயர்த்த... பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு...

புதுடில்லி : "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம். அதனால், டீசல் விலையை லிட்டருக்கு, 5 ரூபாய் வரையும், மண்ணெண்ணெய் விலையை, லிட்டருக்கு, 2 ரூபாயும், சமையல் காஸ் விலையை, சிலிண்டருக்கு, 50 ரூபாயும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், நேற்று அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2.35 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 50 காசுகளும் உயர்த்தப்பட்டது.


கடந்த சில நாட்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சிரியாவில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் சூழ்நிலையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், கிடு கிடுவென அதிகரித்து வருகிறது.இவற்றால், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான செலவினங்கள், அதிகரித்துள்ளன.
டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் ஆகியவற்றை, பொதுமக்களுக்கு மானிய விலைகளில் விற்பனை செய்வதால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் போன்ற, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, கடும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை, கடுமையாக அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தற்போது, 68.36 ரூபாயாகி உள்ளது. அதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால்,நடப்பு நிதியாண்டில், மானிய விலையிலான பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் ஏற்படும் இழப்பு, 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது, சென்ற நிதியாண்டில், 1.61 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவற்றால், கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில், டீசல் விற்பனையில் ஏற்பட்ட இழப்பு, லிட்டருக்கு, 9.29 ரூபாயாக இருந்தது. இது, மாத இறுதியில், 10.22 ரூபாயாக உயர்ந்தது.ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில், 33.54 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில், சிலிண்டருக்கு, 412 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பில், 1 ரூபாய் குறைந்தால் கூட, டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விற்பனையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு, கூடுதலாக, 7,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மானிய விலையிலான பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில், வரலாறு காணாத அளவிற்கு, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதனால், மத்திய அரசின் மானியச் சுமை மேலும்அதிகரிக்கும். இதை தடுப்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிதி இழப்பை ஈடு செய்ய, டீசல் விலையை, லிட்டருக்கு, 3 முதல், 5 ரூபாய் வரையும், மண்ணெண்ணெய் விலையை, லிட்டருக்கு, 2 ரூபாயும், சமையல் காஸ் விலையை, சிலிண்டருக்கு, 50 ரூபாயும் உயர்த்த வேண்டும்.இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2.35 ரூபாயும், டீசலுக்கு, 50 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. "வாட்' மற்றும் உள்ளூர் வரிகள் சேர்த்து, சென்னையில் இந்த விலை உயர்வு, பெட்ரோலுக்கு, 2.99 ரூபாயாகவும், டீசலுக்கு, 61 காசுகளாகவும் இருக்கும்.

Comments