மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுசிறை

புதுடில்லி:டில்லியில், கடந்த ஆண்டு நிகழ்ந்த, மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து, சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
6 பேர் கும்பல்:

டில்லியில், கடந்த ஆண்டு டிச., 16ம் தேதி இரவு, ஓடும் பேருந்தில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தலைநகர் டில்லியையே,
இந்தச் சம்பவம் உலுக்கியது. குற்றவாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரிய அளவில் போராட்டங்களும் நடந்தன.இதையடுத்து, சம்பவம் தொடர்பாக, ராம் சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்கூர் என்ற ஐந்து பேரும், மற்றொரு மைனர் சிறுவனும் கைது செய்யப்பட்டனர். ராம் சிங் உட்பட, ஐந்து பேரும், திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுவன் மட்டும், டில்லி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.திகார் சிறையில் அடைக்கப்பட்ட, ஐந்து பேரில், ராம் சிங், மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டான். அதனால், மற்ற நான்கு பேர் மீதான வழக்கு, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. சிறுவனுக்கு எதிரான வழக்கு மட்டும், டில்லி சிறார் நீதி வாரியத்தில் நடந்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்ப்பை வெளியிட்ட, நீதி வாரிய முதன்மை மாஜிஸ்திரேட், கீதாஞ்சலி கோயல், "கற்பழிப்பு, கொலை உட்பட, பல சட்டப் பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், சிறுவன் குற்றவாளியே' என, அறிவித்து, சிறார் நீதி சட்டத்தின் கீழ், அவனுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிப்பதாகத் தெரிவித்தார்.

மூடப்பட்ட அறையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 60 பக்கங்களை கொண்ட தீர்ப்பின் முழு விவரங்களை, குற்றம் சுமத்தப்பட்டவரோ, அரசு தரப்பினரோ, எதிர்தரப்பு வழக்கறிஞரோ அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரோ, வெளியில் தெரிவிக்கக் கூடாது என்றும், மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.அதே நேரத்தில், 2012 டிச., 16ம் தேதி இரவு, மாணவி கற்பழிக்கப்படுவதற்கு முன்னதாக, அந்த பேருந்தில் ஏறிய தச்சர் ரமாதர் என்பவரிடமிருந்து, ஆறு பேர் கும்பல் பொருட்களை கொள்ளை அடித்தது. இந்த வழக்கிலும், சிறுவன் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டாலும், அதற்கான தண்டனையை அவன், இதுவரை அனுபவித்து விட்டதாக மாஜிஸ்திரேட் கூறினார்.


8 மாத சிறை:

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவன், இதுவரை எட்டு மாத சிறைத் தண்டனை அனுபவித்துள்ளதால், மூன்றாண்டு சிறைத் தண்டனையில், இது கழிக்கப்பட்டு, மீதமுள்ள மாதங்கள் மட்டுமே, அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருக்க நேரிடும் என, கூறப்படுகிறது.தீர்ப்பு பற்றி, சிறுவனுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ராஜேஷ் திவாரி கூறுகையில், ""சிறார் சீர்திருத்தப் பள்ளியில், சிறுவன் நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அவனுக்கான தண்டனை மறுபரிசீலனை செய்யப்படலாம்,'' என்றார்.

சிறார் நீதி வாரியம் அளித்த இந்தத் தீர்ப்பு பற்றி, பாலியல் பலாத்காரத்தால் மரணம் அடைந்த, மருத்துவ மாணவியின் தாயார் கூறுகையில்
, ""எங்களை முட்டாளாக்கி உள்ளனர்; இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை. குற்றம் புரிந்தவன் சிறுவனா அல்லது பெரியவனா என்பதைப் பற்றி எல்லாம், எங்களுக்கு கவலை இல்லை. படுபாதக செயலில் ஈடுபட்ட அவனுக்கு, மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்,'' என்றார்.
மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கு இதுவரை:


2012, டிச. 16: 23 வயது மருத்துவ மாணவி இரவு, ஆண் நண்பருடன் செல்லும் போது, ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டார். இருவரும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, ஆடைகளின்றி ரோட்டில் வீசப்பட்டனர்.
டிச. 18: சம்பவம் தொடர்பாக ராம்சிங், முகேஷ் கைது. மேலும், நான்கு பேர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. தாக்க பயன்படுத்திய இரும்புக் கம்பி பறிமுதல்.
டிச. 19: குற்றவாளிகள் அனைவரும் கைது. அதில், ஒருவன் மைனர் என, தெரிய வந்தது. அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
டிச. 20: மாணவியின் உடல் கவலைக்கிடம். முக்கிய உடல் உறுப்புகள் சேதம். உடல் நலம் குறித்து தீவிர கண்காணிப்பு.
டிச. 21: பாதிக்கப்பட்ட மாணவியிடம் நீதிபதி வாக்குமூலம்.
டிச. 24: சம்பவம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் "டிவி'யில் உரை.
டிச. 26: மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
டிச. 29: அதிகாலை, 4:45 மணியளவில் உடல் உறுப்புகள் செயலிழந்ததால், மாணவி மரணம்.
2013, ஜன. 3: கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம், கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு.
ஜன. 28: கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவன் மைனர் தெரிய வந்தது.
மார்ச். 11: முக்கிய குற்றவாளி ராம் சிங், டில்லி திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை.
மே. 4 - 9: மாணவியுடன் சென்ற ஆண் நண்பரிடம் போலீசார் வாக்குமூலம்.
மே. 20: 77 சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது. வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளது என, கோர்ட் அறிவிப்பு.
ஆக. 31: மைனர் சிறுவனுக்கு டில்லி சிறார் கோர்ட், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

Comments