
யாழ்ப்பாணம்: தமிழகத்தின் மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்குதல்
நடத்துவதற்காக பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இலங்கையின்
யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருப்பதாக வெளியான செய்திகளை இலங்கை ராணுவம்
நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கை ராணுவத்தின் உதவியுடன் கடல்வழியாக ஊடுருவி
தமிழகத்தின் மதுரை அல்லது மயிலாடுதுறையில் மும்பை பாணியிலான தாக்குதலை
நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
முடுக்கிவிடப்பட்டுள்ளன. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்
ருவான் வணிகசூரிய, இலங்கை முழுவதும் பாதுகாப்பு நிலையில் உள்ளது. இந்திய
உளவுத் துறை கூறுவது போல எந்தத் தாக்குதலையும், எந்த ஆயுதக்குழுவும்
மேற்கொள்ள முடியாது.
இலங்கைத்தீவின் எல்லைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. எந்த
ஆயுதக்குழுவுமே, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் எந்தவொரு
பகுதியிலும், ஒருங்கிணையவோ, பயிற்சி பெறவோ, தாக்குதல் தொடுக்கவோ முடியாது
என்றார்.
இதேபோல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக வெளியான
செய்திகளை இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய நிராகரித்துள்ளார்.
"இந்தச் செய்திகள் நிச்சயமாக அடிப்படையற்றவை. யாழ்ப்பாணத்தில்
இந்தியாவுக்கு தூதரகம் உள்ளது. அங்கு எத்தகைய இரகசிய இராணுவ செயற்பாடுகளும்
நடக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
Comments