
திரைப்பட இயக்குனர் சேரனின் இளைய மகள், தாமினி. உதவி இயக்குனர் சந்துரு (எ) சந்திரசேகரனை காதலித்ததால் பிரச்னை ஏற்பட்டது.
மிரட்டல்:
கடந்த,
2ம் தேதி, திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார்
அளித்த தாமினி, ""தந்தை சேரன், அடியாட்களை வைத்து என் காதலனை
மிரட்டுகிறார்; என் காதலை தடுக்கிறார். போலீஸ் பாதுகாப்பு அளிக்க
வேண்டும்,'' என்றார். பதிலுக்கு சேரனும், நேற்று முன்தினம் புகார்
அளித்தார். இதையடுத்து, இருதரப்பினரையும் அழைத்து, நேற்று முன்தினம் இரவு
வரை பேச்சுவார்த்தை நடத்தினர். தாமினி இறுதிவரை பிடிவாதமாக இருந்ததால்,
அவரை, மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பினர்.
இந்நிலையில்,
சேரன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர், பத்திரிகையாளர்களை
சந்தித்து கூறியதாவது: நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா,
தியேட்டர் ஊழியர். அம்மா, ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணி,
பணக்கார வாசனை வரக்கூடாது என, நினைத்தேன். சுதந்திரமாக வளர்த்தேன்.
காதலித்தால் எதிர்க்கக் கூடாது என்றும் நினைத்தேன். நானும் என் மனைவியும்
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நாங்கள் என்ன ஜாதி என, இன்று வரை
என் மகள்களுக்கு சொல்லியதில்லை. மூத்த மகள் விவரமானவள். இளையவளுக்கு விவரம்
தெரியவில்லை. இந்நிலையில், தாமினிக்கு, 18 வயதில் காதல் வந்தது. படிப்பு
முடியட்டும்; அவசரப்படாதே, திருமணம் செய்து வைக்கிறோம் என, கூறினோம்.
பின்னணி:
இதன்பிறகே,
தாமினி காதலிப்பதாக சொன்ன சந்துரு குறித்து விசாரித்தோம். அவன் பின்னணி,
பயத்தை ஏற்படுத்தியது. வேலை ஏதும் செய்யவில்லை. இருந்தாலும், சந்துருவின்
குடும்பத்தினரை சந்தித்து பேசினேன். "மாதம், 10, 15 ஆயிரம் ரூபாயாவது
சம்பாதிக்க முயற்சி செய்; வாழ்க்கையில் முன்னேறி காட்டு; மூன்று ஆண்டுகள்
கழித்து, திருமணம் செய்து வைக்கிறேன்; அதுவரை பேசுவதை தவிர்த்துக்கொள்,'
என்றேன். ஒப்புக் கொண்டான். ஆதாரங்கள் உள்ளன எனக்கு தெரியாமல், என் மகளுடன்
பேசிஉள்ளான். ஒரு கட்டத்தில், என் மகளை எங்களுக்கு எதிராக தூண்டிவிட்டான்.
"சந்துருவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருந்தால்
செத்துடுவேன்' என, என் மகளை என்னிடமே பேச வைத்தான். உடனே நான் போன் செய்து,
என் மகளை அவனுடன் பேச வைத்தேன். எந்த அப்பனும் செய்யாததை நான் செய்தேன்.
பிறகு, அவன் நடவடிக்கை வேறு மாதிரி இருந்தது. நிறைய பொய் சொன்னான். என்
மகளுடன் பேசக்கூடாது என, சொன்ன நாட்களில், வேறு சில பெண்களுடன், இரவில் பல
மணி நேரம் பேசிஉள்ளான். ஆதாரமும் என்னிடம் உள்ளது. இத்துடன், என் மூத்த
மகளுக்கும், "ஐ லவ் யூ' என, "பேஸ்புக்'கில், கூறிஉள்ளான். பல பெண்களுடன்
அவனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில்
சமர்ப்பிக்கவும் தயார். நடத்தையில் மோசம்; பொருளாதாரத்தில் திருப்தி இல்லை;
பெண்களுடன் தகாத தொடர்பு, இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, எந்த அப்பன், தன்
மகளை இப்படியொருவனுக்கு கட்டிக் கொடுப்பான்.
நடந்தது மூளைச்சலவை:
"உன்
அப்பா இயக்கும் படத்தில், என்னை நடிக்க வைக்கணும் என சொல்' என,
தாமினியிடம் சந்துரு கூறியுள்ளான். இதைக் கேட்டு, "இயக்குனர் எழில்
இயக்கும் படத்தில், சந்துருவை நடிக்க வைக்கணும்,' என, என் மகளும், என்னிடம்
சொன்னாள். என் மகளை வைத்து, சொத்துகளையும், பணத்தையும் சுருட்ட
திட்டமிட்டிருப்பதை உணர்ந்தேன். அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அவனுக்கு
கொலை மிரட்டல் விடுக்கவில்லை. என் மகளே, ஒரு கட்டத்தில் மனம் மாறி, அவனை
வேண்டாம் என்றாள். இப்போது, திடீரென என் மகளின் மனதை மாற்றி, மூளைச்சலவை
செய்து, எனக்கு எதிராக திருப்பிவிட்டு உள்ளான்.
அறிமுகம் இல்லை:
என் மனைவியை, நான் இதுவரை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்ததில்லை. ஒரு
தாய் என்ற முறையில், அவளின் துயரமும் உங்களுக்கு தெரிய வேண்டும் என,
நினைத்து தான், இங்கு அழைத்து வந்திருக்கிறேன். இவ்வாறு, சேரன் கூறினார்.
இந்த சந்திப்பில் இயக்குனர் அமீர் பேசும்போது, ""சந்துருவின் குடும்பம்
நல்ல குடும்பம் என்றால், நானே பேசி திருமணம் செய்து வைப்பேன். சந்துரு
நல்லவர் அல்ல; குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. சந்துரு மீது மூன்று
பெண்கள் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர்,'' என்றும், குறை கூறினார்.
சேரன் மகள் புகாரில் காதலன் மீது வழக்கு:
இயக்குனர்
சேரன் மகள் தாமினி அளித்த புகார்களின் பேரில், காதலன் சந்துரு மற்றும்
தந்தை சேரன் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு
செய்துள்ளனர். சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலை பகுதியில் வசித்து
வரும் இயக்குனர் சேரன் மகள், தாமினி அளித்த புகார் தொடர்பான பிரச்னை
தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் இரவு, பல்வேறு
பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பும், "காதலனுடன் தான் செல்வேன்,' என்று
தாமினி கூற, இறுதியாக, மயிலாப்பூரில் உள்ள, அரசு இல்
லத்தில் தங்க
வைக்கப்பட்டுள்ளார். தாமினியின் காதலன் சந்துரு, சூளைமேட்டில் உள்ள
வீட்டில் உள்ளார். அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று காலை, சேரன், அவரது மனைவி மற்றும் இயக்குனர் அமீர்
ஆகியோர், சந்துரு மீது பல்வேறு புகார்களை தெரிவித்து உள்ளனர். அப்போது,
வீட்டில் இருந்து, "டிவி' மூலம் பேட்டியை பார்த்த, சந்துரு மிகுந்த
ஆவேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாமினியின் புகார்களின்
அடிப்படையில், சந்துரு மீதும், தந்தை சேரன் மீதும், சென்னை மத்திய
குற்றப்பிரிவில் வழக்குகளை பதிந்து உள்ளனர். தாமினியை காதலிப்பது தொடர்பாக,
"பேஸ்புக்'கில், சந்துரு வெளியிட்ட படம் உள்ளிட்டவை குறித்து, தாமினி
சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருந்தார். இப்புகாரின் பேரில்,
அவர் மீது, தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவின் படி, வழக்குப்
பதியப்பட்டது. அதே போல், கொலை மிரட்டல் விடுத்ததாக, தந்தை சேரன் மீது,
தாமினி அளித்த புகாரின் பேரில், சேரன் மீதும் மத்திய குற்றப்பிரிவினர்
வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சந்துருவை விசாரணைக்கு திங்களன்று
(இன்று) ஆஜராகும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராகும் போது, அவரிடம், இந்த வழக்கு குறித்தும்
விசாரிக்கப்படலாம், என தெரிகிறது.
Comments