யாருடன் தி.மு.க., கூட்டணி? மாவட்ட செயலர்களிடம் கருணாநிதி இன்று கேட்கிறார்

லோக்சபா தேர்தலில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் இன்று அறிவாலயத்தில் கூடுகிறது.

அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலை சந்திக்க, தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நவம்பர் மாதத்தில், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் சேர்ந்து நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த, 2004ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. ஒன்பது ஆண்டுகளாக நீடித்த அக்கட்சிகளின் கூட்டணி, இலங்கை தமிழர் பிரச்னையால், சமீபத்தில் உடைந்தது; மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வெளியேறியது. எனினும், உணவு பாதுகாப்பு சட்டம் உட்பட பல பிரச்னைகளில், மத்திய அரசை, தி.மு.க., கடுமையாக விமர்சிக்கவில்லை. இதனால், லோக்சபா தேர்தலை ஒட்டி, மீண்டும் காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, கனிமொழி எம்.பி., ஆகியோரின் தரப்பில், காங்கிரசுடன் கூட்டணி உருவாக வேண்டும் என, முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தரப்பில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து, பின் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை பற்றி பரிசீலிக்கலாம் என, கருத்து தெரிவிக்கப்படுகிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகளை, சம தூரத்தில் வைத்து காய் நகர்த்தி வருகிறார். நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், தேசிய கட்சிகளின் பலத்தைப் பொறுத்து, கூட்டணி குறித்த முடிவு எடுக்கலாம் என, கருணாநிதி தரப்பில் கருதப்படுகிறது. இதற்கிடையில், எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்பது குறித்து, மாவட்டச் செயலர்கள் கருத்துக்களை அறியவும், பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பது, சட்டசபை, பார்லிமென்ட் தொகுதி வாரியாக, வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்க தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கவும், அறிவாலயத்தில் மாவட்டச் செயலர்கள் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை கூடுகிறது.

Comments