தேசியக்கொடி பறப்பதற்கு முன் தேசிய கீதம் இசைப்பு: கோட்டையில் சலசலப்பு

சென்னை: சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த, சுதந்திர தின விழாவில், தேசியக்கொடி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு சார்பில், சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில், நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கோட்டை முன், சிறப்பு விருந்தினர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் - ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகள் அமர, தனித்தனி இடங்களில் இருக்கை போடப்பட்டிருந்தது.
காலை, 8:10 மணிக்கு, கோட்டை உள்ளே தயாராக இருந்த, கமாண்டோ வீரர்கள், ஆயுதம் ஏந்திய போலீசார், பேண்டு வாத்தியக் குழுவினர், குதிரை வீரர்கள், என்.சி.சி., மாணவர்கள், சாரணர் இயக்க மாணவர்கள், கோட்டை கொத்தளம் முன் அணிவகுத்தனர். மழை பெய்தால், அவர்கள் நனையாமலிருக்க, தற்காலிக கூரை அமைக்கப்பட்டிருந்தது. காலை, 8:47 மணிக்கு, கோட்டை கொத்தளம் முன் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு, முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை, தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பின், முதல்வர் திறந்த ஜீப்பில் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார். காலை, 9:00 மணிக்கு, முதல்வர் தேசியக்கொடியை ஏற்றினார். கொடி அவிழ்வதற்கு முன், கயிற்றை அருகில் இருந்த ராணுவ வீரரிடம் கொடுத்துவிட்டு, கொடிக்கு வணக்கம் செலுத்தினார். ராணுவ வீரர் கொடியை பறக்க விடுவதற்கு முன், போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர், தேசிய கீதம் இசைக்கத் துவங்கினர். உடனே ராணுவ வீரர், கொடியை சரி செய்யாமல், முறைப்படி வணக்கம் செலுத்தினார். தேசிய கீதம் முடிந்த பிறகு, கொடியில் சுற்றப்பட்டிருந்த கயிற்றை இழுத்தார். கொடியிலிருந்த பூக்கள் சிதற, கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கியது. உடனே மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோட்டையில் கொடியேற்ற வரும் முன், முதன் முறையாக, நேற்று, போர் நினைவு சின்னத்திற்கு சென்றார். அவரை, முப்படையினர் வரவேற்றனர். அங்குள்ள நினைவுத் தூணில், நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின், கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

Comments