
கோட்டை கொத்தளம்:
டில்லி
அருகே உள்ள செங்கோட்டையின் கொத்தளத்தில், நாட்டின், 67வது சுதந்திர தின
விழாவை போற்றும் வகையில்,
தேசியக் கொடியேற்றி, உரையாற்றினார். அவர் உரையின்
முக்கிய அம்சங்கள்: மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த, நம்
கடற்படையின், "ஐ.என்.எஸ்., சிந்து ரக்ஷக்' நீர்மூழ்கி கப்பல் விபத்தில்
பலியானதாக அஞ்சப்படும், 18 வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்
கொள்கிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவு நிலவ வேண்டும் என்பது தான்
நம் விருப்பம்; ஆனால், நல்லுறவு வேண்டுமானால், அந்நாட்டின் எல்லையிலோ
அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்தோ, நம் நாட்டிற்கு
எதிரான நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எல்லை கட்டுப்பாட்டு
கோட்டு பகுதியில், அடிக்கடி அத்துமீறி, பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தும்
தாக்குதல் மீண்டும் நிகழா வண்ணம் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நவீன,
மதச்சார்பற்ற, தொடர்ந்து முன்னேறும் நம் நாட்டில், குறுகிய மனப்பான்மை
கொண்டோருக்கும் பிரிவினைவாத கொள்கைகளுக்கும் இடமில்லை. அந்த
மனப்பான்மையும், கொள்கைகளும், ஜனநாயகத்திற்கு ஊறு விளைவித்து விடும்.
அவ்வப்போது நடக்கும், நக்சல் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை;
சத்தீஸ்கர் மாநிலத்தில், மே மாதம், 25ம் தேதி, நக்சல்களால் நிகழ்த்தப்பட்ட
தாக்குதல், ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி என கருதுகிறோம்.
உத்தரகண்டுக்கு உதவி:
பேய்மழை
மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநில மக்களுக்கு,
நாட்டு மக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த
வேண்டும். பேரழிவை சந்தித்துள்ள அந்த மாநிலத்தை புனரமைக்க தேவையான அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். ஏழை மக்களுக்கு
உணவளிக்க வகை செய்யும், உணவு பாதுகாப்பு மசோதா, பார்லிமென்டில் விரைவில்
நிறைவேறும் என நம்புகிறேன். மசோதா நிறைவேறியதும், திட்டமும் விரைந்து
செயல்படுத்தப்படும். பொது வினியோக முறையை, கம்ப்யூட்டர்மயமாக்கும்
நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். சில நாட்களுக்கு முன், பீகார் பள்ளி
ஒன்றில், மதிய உணவு அருந்திய குழந்தைகள் பலியான சம்பவம் நாட்டையே
அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது போன்ற சம்பவம், நாட்டின் எப்பகுதியிலும்
மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும். அது போல், மதிய உணவு திட்டம்
நவீனமயமாக்கப்படும்; குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, சத்துள்ள
உணவாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கும் வகையில்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வறுமையைக் கணக்கிடுவது எளிதானதல்ல;
வறுமைக்கு பல காரணங்கள் உள்ளன. 2004ம் ஆண்டிற்குப் பிறகு, வறுமை ஒழிப்பு
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார மந்த நிலையின் தீவிரத்தை
குறைக்க அரசு, மும்முரமாக செயல்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி:
கடந்த
ஒன்பதாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சிறப்பாக அமைந்துள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக, 7.9 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இத்தகைய
வளர்ச்சி, நாட்டில் இதுவரை எந்த காலகட்டத்திலும் ஏற்படவில்லை. அது போல்,
கடந்த ஒன்பதாண்டுகளில், நாட்டின் உள்கட்டமைப்பு சிறப்பான வளர்ச்சியை
கண்டுள்ளது. சாலைகள், ரயில் பாதைகள், மின்சார உற்பத்தி, விமான
போக்குவரத்து, துறைமுகங்கள், தொலை தொடர்பு போன்ற துறைகள் வளர்ச்சி
கண்டுள்ளன. பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் படி, 2 லட்சம் கி.மீ.,க்கு
புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. 37,000 கி.மீ., புதிய நெடுஞ்சாலைகள்
போடப்பட்டுள்ளன; 40 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன அல்லது
புனரமைக்கப்பட்டுள்ளன. தொழில்கள் துவங்குவதற்கான நடைமுறைகள்
எளிதாக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான வழிமுறைகளும்
அணுகக் கூடியதாக உள்ளன. மின் உற்பத்திக்கு, போதிய நிலக்கரி கிடைக்காத நிலை,
விரைவில் சரி செய்யப்படும்.
ரூ.10 ஆயிரம் வெகுமதி:
புதிதாக,
இரண்டு துறைமுகங்கள், எட்டு விமான நிலையங்கள், தொழில் வளாகங்கள் மற்றும்
ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். "பிமரு' என சுருக்கமாக
அழைக்கப்படும், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச
மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, சிறப்பாக உள்ளது. புதிய திறமைகளை
வெற்றிகரமாக பெற்றவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும். நாடு
முழுவதும், 10 லட்சம் பேர் இதனால் பயனடைவர். இவ்வாறு, பிரதமர் மன்மோகன்
சிங் பேசினார்.
10வது முறை கொடியேற்றிய பிரதமர் மன்மோகன் சிங்:
சுதந்திர
தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில், மூவர்ண கொடியை, பத்து முறை
ஏற்றிய, நேரு குடும்பத்தை சாராத முதல் பிரதமர் என்ற பெருமையை, மன்மோகன்
சிங் பெற்றுள்ளார். நாட்டின் முதல் பிரதமர் நேரு, 1947, ஆகஸ்ட், 15ம் தேதி,
முதல் முறையாக, தேசிய கொடியை, இந்த வரலாற்று சிறப்பு மிக்க, 17ம்
நூற்றாண்டை சேர்ந்த கோட்டையில் ஏற்றினார். அவர் தொடர்ந்து, 17 முறை
செங்கோட்டையில் கொடியேற்றியுள்ளார். அவரின் மகளும், முன்னாள் பிரதமருமான
இந்திரா, 11 முறை தொடர்ச்சியாகவும், மொத்தம், 17 முறையும்
கொடியேற்றியுள்ளார். அவர்களுக்கு பிறகு, அதிக முறை, செங்கோட்டையில்
கொடியேற்றியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மன்மோகன் சிங், நேற்று, பத்தாவது
முறையாக, செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றியுள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தொடர்ந்து, ஆறு முறை கொடியேற்றியுள்ளார்.
21 பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன்...:
நாட்டின்
பிரதமராக, தொடர்ந்து, பத்தாவது முறையாக, சுதந்திர தின உரையாற்ற, டில்லி
செங்கோட்டைக்கு செல்லும் முன், ராஜ்காட் பகுதியில் உள்ள, தேசத்தந்தை
மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று, மன்மோகன் சிங் அஞ்சலி
செலுத்தினார். கோட்டை கொத்தளத்தில் அவரை, ராணுவ அமைச்சர் அந்தோணி மற்றும்
இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வரவேற்றனர். முப்படை தளபதிகள், பிரதமருக்கு
அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பிரதமர் பேசிய மேடையின் முன்புறம், 3,500
பள்ளி மாணவ, மாணவியர், மூவர்ண கொடி போல அமர வைக்கப்பட்டிருந்தனர். மூவர்ணக்
கொடியை மன்மோகன் ஏற்றியதும், 21 பீரங்கி குண்டுகள் முழங்கின. நிகழ்ச்சி
துவங்கும் போதே, மழை பெய்வதற்காக, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
எனினும், 40 நிமிடங்கள், பிரதமர் உரையாற்றி முடிக்கும் வரை, மழை
பெய்யவில்லை; அவர் கீழிறங்கி சென்றதும் மழை பெய்யத் துவங்கி, நீண்ட நேரம்
வெளுத்து வாங்கியது.
வரலாறு காணாத பாதுகாப்பு:
பாகிஸ்தான் பயங்கரவாதிகளால், டில்லி செங்கோட்டையில் சுதந்திர தின
கொண்டாட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என, உளவுத்துறை தகவல்கள்
தெரிவித்ததால், தலைநகரின் அனைத்து பகுதிகளிலும், வரலாறு காணாத பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடைபெற்ற, செங்கோட்டை பகுதியில்,
வானில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தரையிலிருந்து வானை
நோக்கி, பல மறைவிடங்களில், எதிரி விமானங்களை தகர்க்கும் பீரங்கிகள்
நிறுத்தப்பட்டிருந்தன. துப்பாக்கியால் குறிபார்த்து, சரியாக சுடும்
வீரர்கள் பலர், சாதாரண உடையில், பார்வையாளர்களுடன் கலந்திருந்தனர். டில்லி
போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் என, 8,000 பேர் பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர். நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் மூலம்,
கூட்டம் கண்காணிக்கப்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, சாலை தடுப்புகள்
ஏற்படுத்தப்பட்டிருந்தன.
Comments