இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்

புதுடில்லி :சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி, 20 கி.மீ., ஊடுருவி, இரண்டு நாட்கள் முகாமிட்டு, தங்கியிருந்து விட்டு, திரும்பிச் சென்ற தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கை:

நமக்கு சொந்தமான அருணாச்சல பிரதேச மாநிலத்தை, சீன அரசும், சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, அருணாச்சல பிரதேசத்துக்குள், சீன ராணுவம்,
அத்துமீறி நுழைவது, வாடிக்கையாக நடக்கிறது. இதேபோல், காஷ்மீரின் லடாக் பகுதிக்குள்ளும், சீன ராணுவத்தின் ஊடுருவல், அடிக்கடி நடக்கிறது. கடந்த ஏப்ரலில், லடாக் பகுதியில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி, 19 கி.மீ., ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள், அங்கு, மூன்று வாரங்கள், முகாமிட்டு தங்கியிருந்தனர்.சீன - இந்திய அரசுகளுக்கு இடையே நடந்த, தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து, சீன ராணுவம், இந்திய பகுதியிலிருந்து திரும்பிச் சென்றது. இந்நிலையில், சீன அரசுக்கு, நம் படை வலிமையை காட்டும் வகையில், நேற்று முன்தினம், லடாக்கில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள, விமான தளத்துக்கு, இந்திய விமானப் படை விமானம், அனுப்பி வைக்கப்பட்டது.அடிக்கடி ஊடுருவும், சீன ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, இந்த விமானம், அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, கடந்த வாரம், அருணாச்சல பிரதேசத்தில், இந்திய எல்லைக்குள், சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவிய தகவல், தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:இம்மாதம், 13ம் தேதி, சீன ராணுவத்தின் சிறிய குழு, தங்கள் எல்லையை கடந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்துக்குள், அத்துமீறி ஊடுருவியது. இந்திய எல்லைக்குள், 20 கி.மீ., ஊடுருவிய அவர்களை, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.ஆனாலும், இந்திய பகுதியிலிருந்து பின்வாங்க மறுத்த, சீன ராணுவத்தினர், அங்கேயே முகாமிட்டு தங்கினர். "இது, சீனாவுக்கு சொந்தமான பகுதி' என்ற போர்டையும், அங்கு வைத்தனர். இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவ வீரர்களும், "இது, இந்தியாவுக்கு சொந்தமான பகுதி' என்ற போர்டை வைத்தனர்.


பதற்றம்:

இதனால், அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும், தங்களின் நிலையில் உறுதியாக இருந்தனர். இரண்டு நாட்கள், இதே நிலை தொடர்ந்தது. இதன்பின், சீன ராணுவத்தினர், இந்திய பகுதியிலிருந்து வாபஸ் பெற்று, தங்கள் எல்லைக்குள் சென்று விட்டனர். இதனால், பதற்றம் தணிந்துள்ளது.இவ்வாறு, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், இந்திய பகுதிக்குள்ளேயே, இரண்டு நாட்கள், முகாமிட்டு தங்கியிருந்தது, அரசியல் வட்டாரத்தில், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது."அருணாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீரில், சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை, மேலும் பலப்படுத்த வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அமைதிக்கு பாதிப்பு:


தூதர் கவலை:இந்தியா - சீனா நல்லுறவு குறித்த கருத்தரங்கம், பீஜிங்கில் நடந்தது. இதில், இந்திய தூதர், ஜெய்சங்கர் பேசியதாவது:சமீப காலமாக, எல்லை பகுதிகளில், சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நிகழ்வதாக, தகவல்கள் வெளியாகின்றன. மோதல், ஊடுருவல் போன்ற சம்பவங்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான, நல்லுறவை சீர்குலைத்து விடும்.எல்லை பகுதியில், பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஒட்டு மொத்த சூழலையும், மோசமாக்கி விடும். பிரம்மபுத்ராவில், சீனா சார்பில், புதிய அணை கட்டுவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச உறவு குறித்து, ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும், ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை, குறைத்து மதிப்பிடக் கூடாது.இவ்வாறு, ஜெய்சங்கர் பேசினார்.

Comments