ஜூலையில் பீர் விற்பனையில் "தள்ளாட்டம்': மேட்டூர் அணை திறந்ததால் இனி சீராகும்

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வறட்சியால், "டாஸ்மாக்' கடைகளில், சென்ற ஜூலை மாதத்தில், பீர் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

தினமும் ரூ.67 கோடிக்கு விற்பனை:

தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும் சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன.
டாஸ்மாக் கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.எல்.,) மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய, காவிரி டெல்டா பகுதியில், கடும் வறட்சி நிலவியது. இதனால், இந்த மாவட்டங்களில், மது வகைகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளன.

37 லட்சம் பெட்டிகள்:

சென்ற ஜூலை மாதம், 348 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.48 கோடி பீர் பாட்டில்கள் (29 லட்சம் பெட்டிகள்) விற்பனையாகி உள்ளன. அதேசமயம், இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில், இவற்றின் விற்பனை, 37 லட்சம் பெட்டிகள் அதாவது, 4.44 கோடி பாட்டில்கள் என்ற அளவில் இருந்தது. இதன் மதிப்பு, 444 கோடி ரூபாயாகும். ஜூலை மாதம், மது பானங்கள் விற்பனை, 46 லட்சம் பெட்டிகளாக குறைந்துள்ளது. இது, அதற்கு முந்தைய மாதத்தில், 48 லட்சம் பெட்டிகளாக உயர்ந்திருந்தது.

விவசாய பணிகள் மும்முரம்:

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: கோடையில், வெயில் கொளுத்தி யதால், பீர் விற்பனை நன்கு இருந்தது. மின்வெட்டால், தொழிற்சாலை பணியாளர்களும், மழையின்மையால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், சரக்கு விற்பனை குறைந்துள்ளது. தற்போது, மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாய பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதனால், இனி, விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments