தி.மு.க., ஆதரிக்குமா? எதிர்க்குமா? முதல்வர் கேள்வி

சென்னை:"தமிழக மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ள, தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை, தி.மு.க., ஆதரிக்குமா? அல்லது எதிர்க்குமா? என்பதை, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெளிவுப்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: தேசிய உணவு பாதுகாப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன், கருணாநிதி விடை அளிக்க வேண்டும் என, சில கேள்விகளை முன் கேட்டிருந்தேன்.என் கேள்விகளுக்கு பதில் அளித்த கருணாநிதி, "தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்து தெரிவித்துள்ள,
முக்கியமான திருத்தங்களை, தாங்கி வெளிவருமானால், அப்போது அதை தி.மு.க., ஆதரிக்கும்' என்றிருந்தார்.இச்சூழ்நிலையில், பார்லிமென்ட்டில், விவாதத்திற்கு வரவிருக்கும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை, தற்போது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள, திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த மசோதாவை எதிர்த்து, அதி.மு.க., ஓட்டளிக்கும்.தமிழக மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ள, தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை, தி.மு.க., ஆதரிக்குமா? அல்லது எதிர்க்குமா? என்பதை கருணாநிதி தெளிவுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

உணவு பாதுகாப்பு சட்டம் இறக்குமதி செய்யும் நிலை வந்தால் நிலை என்ன: ஜெ., கேள்வி:"உணவு பாதுகாப்பு மசோதாவில், இன்னும் சில திருத்தங்களை செய்து, அதை செம்மைப்படுத்த வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் தேவைக்கு உணவு தானியங்களை இறக்குமதி செய்தால், அதற்காகும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்த அவரது கடிதம்:பார்லிமென்டில் அவசரமாக பிறப்பிக்கப்பட்ட, உணவு பாதுகாப்பு அவசர சட்டத்திற்கு மாற்றாக, உணவு பாதுகாப்பு மசோதா தாக்கலாகியுள்ளது. இந்த மசோதாவில், சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று, நான் இம்மாதம், 2ம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.என் வேண்டுகோளுக்கேற்ப, பொது வினியோகத் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு வழங்கப்படும் உணவு தானியத்தின் அளவு குறைக்கப்பட மாட்டாது என்ற விதி, உணவு பாதுகாப்பு மசோதாவில் சேர்க்கப்பட்டு, நான்காவது அட்டவணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஆனால், மாநில்ஙகளுக்கு உணவு தானியங்கள் என்ன விலையில் கொடுக்கப்படும் என்ற முடிவு, மத்திய அரசின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. அரிசியின் பொருளாதார செலவு சார்ந்த விலை அடிப்படையில், மாநிலங்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டால், தமிழக அரசிற்கு, 1,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச் சுமையை, தமிழக அரசு ஏற்க வேண்டியிருக்கும்.



தெளிவில்லை:

எனவே, மாநிலங்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இது, மாநில அரசுளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது. ஒரு கிலோ அரிசி, 3 ரூபாய்க்கோ அல்லது வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல், ஒரு கிலோ அரிசி, 8:30 ரூபாய் என்ற வகையில், நிர்ணயிக்க வேண்டும்.இது தொடர்பாக தெளிவாகக் கூறப்படாதது குறையாக உள்ளது. இதை நிவர்த்தி செய்வதுடன், கூடுதலாக ஒதுக்கப்படும் உணவுப் பொருட்களும் என்ன விலைக்கு வழங்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.மசோதாவின், பிரிவு 3(2), திருத்தப்பட்டால், கிராமங்களில் வாழும், 75 சதவீதம் பேர் பயனடைவது போல், நகரங்களில் உள்ள, 100 சதவீதம் பேர் பயனடைவர் என்பதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும், நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களைப் போல், 75 சதவீதத்தினராவது, பயனடைய வழி வகை செய்ய வேண்டும். இந்த திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

சட்டத்தின் முதல் அட்டவணையில், தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையில், மூன்றாண்டுகளுக்கு மட்டுமே, உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல; குறைந்த பட்சம், 10 ஆண்டுகளாக அதை உயர்த்த வேண்டும்.உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குரிய பொறுப்பு மத்திய அரசிற்கு மட்டுமே உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த திருத்தத்தை கொண்டு வந்தால் தான், உண்மையிலேயே, உணவு பாதுகாப்பு சட்டமாக அமையும்.அவசர சட்டம் அடிப்படையில், 180 நாட்களுக்குள் பயனாளிகளை மாநில அரசுகள் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், இந்த கால அவகாசம் போதுமானதல்ல; இதை, 365 நாட்களாக உயர்த்த வேண்டும். சமூக பொருளாதார, ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு விவரங்கள் முழுமையாக கிடைக்காததால், கால அவகாசம் குறித்து, பரிசீலிக்க வேண்டும்.

மேலும், உணவு தானியங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், மத்திய அரசு பணம் அளிப்பது அல்லது உணவுக் கூப்பன்களை வழங்குவது குறித்து சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திருத்தப்பட வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலின்றி மத்திய அரசு இதை நிறைவேற்றக் கூடாது.நான் ஏற்கனவே தெரிவித்திருந்த சில யோசனைகள், உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பான திருத்தங்களில் உள்ளன. மற்ற திருத்தங்களையும் சேர்த்தால் தான் மசோதா நிறைவு பெறும். எனவே, மற்ற யோசனைகளையும் பரிசீலித்து, திருத்தங்களாக சேர்த்து மசோதாவை செம்மைப்படுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments