
சென்னை: தேமுதிகவிலிருந்து ஒரு பெரிய தலை கட்சியை விட்டு
வெளியேறுகிறது. அவர் முன்னாள் எம்.பியான கட்சியின் மாநில துணைச் செயலாளர்
ஆஸ்டின்.
தனது ஆலோசகர்களுடன் சென்னையில் முகாமிட்டு ஆஸ்டின் தீவிர ஆலோசனை நடத்தி
வருகிறார். இன்றைக்குள் தனது முடிவை அவர் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன.
பல்வேறு எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் முக்கிய நிர்வாகி
விலகவுள்ளது தேமுதிக தரப்பி்ல
மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆஸ்டின். கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக
பொறுப்பாளர் பதவியையும் வகித்து வந்தார். தேமுதிகவில் இணைந்ததும் 2009-ம்
ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதி தேமுதிக வேட்பாளராக
போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் தேமுதிக
வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் இவர் தோற்றுப் போனதற்கு
உட்கட்சிப் பூசலே காரணம் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இருப்பினும் ஆஸ்டின் தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார்.
மேலும் தனது பதவியைப் பயன்படுத்தி மாவட்டத்தில் தனக்கு எதிரான சிலரை
கட்சியை விட்டு நீக்க வைத்தார். ஆனால் அவர்கள் மீண்டும் கட்சிக்குள் வந்து
விட்டனர். இதனால் ஆஸ்டின் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் சமீப காலமாக தனது ஆதரவாளர்களுடன் நாகர்கோவில் அவரச ஆலோசனகளை
நடத்தி வந்தார். தற்போது சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளார். இங்கு தீவிர
ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் கட்சியை விட்டு விலக தீர்மானித்திருப்பதாக
தெரிகிறது.
இங்கிருந்து எங்கு போய் அவர் சேருவார் என்று தெரியவில்லை. அனேகமாக இவர்
அதிமுக அல்லது காங்கிரஸுக்குப் போகலாம் என்று கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் ஆஸ்டின் அதிமுககாரர்தான். ராஜ்யசபா எம்பியாக இருந்துள்ளார்.
பின்னர் திருநாவுக்கரசு கட்சி தொடங்கியபோது அதில் சேர்ந்தார். நாகர்கோவில்
தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக கடந்த 2001ல் வென்றார்.
பின்னர் திருநாவுக்கரசு கட்சியைக் கலைத்து விட்டுப் போனதால், இவர் மீண்டும்
அதிமுகவுக்குத் திரும்பினார். பிறகுதான் தேமுதிகவுக்கு வந்தார்.
Comments