இலவச அறிவிப்புக்கு தடை விதிக்கக்கூடாது : தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கோரிக்கை

சென்னை:"தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கக் கூடாது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள், தேர்தலின்போது, இலவச திட்டங்கள் தொடர்பாக அளிக்கும் வாக்குறுதிகளை, லஞ்சமாக அறிவிக்க முடியாது. இலவச பொருட்கள் வழங்க, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும், வாக்குறுதிகள் தொடர்பாக, புதிய நெறிமுறைகளை வகுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.



கடிதம் :

அதன் அடிப்படையில், நேற்று தேர்தல் கமிஷன் சார்பில், டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அ.தி.மு.க., சார்பில், அக்கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதா, தேர்தல் கமிஷன் முதன்மை செயலர் அஜயகுமாருக்கு, அ.தி.மு.க.,வின் கருத்துக்களை, கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:ஜனநாயக நாட்டில், அரசியல் கட்சிகள், தங்களின் கொள்கைகள், நோக்கங்கள், ஆட்சிக்கு வந்தால், செயல்படுத்த உள்ள திட்டங்கள், ஆகியவற்றை தேர்தல் அறிக்கை மூலம் தெரிவிக்கின்றன. பொதுமக்களும், சுதந்திரமாக, அரசியல் கட்சிகள் அளிக்கும், தேர்தல் அறிக்கை அடிப்படையில், தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர். எனவே, தேர்தல் நடத்தை விதிகளை தயார் செய்யும்போது, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. பெரும்பாலான ஜனநாயக நாடுகளில், அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கை வெளியிட, கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையை, சுதந்திரமாக விரும்பும் நேரத்தில் வெளியிட, அனுமதிக்க வேண்டும். அதற்கும் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. ஏனெனில், சூழலுக்கேற்ப சமூக திட்டங்கள் அறிவிக்கப்படும்.
இலவசம் :


அதேபோல், தேர்தல் அறிக்கையில், இலவச பொருட்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதற்கும், தடை விதிக்கக் கூடாது. சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களின், அந்தஸ்தை உயர்த்துவதற்காகவே, இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கவே, அரசால் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தில், பொதுமக்கள் எப்போதும், எந்த கட்சி தேர்தல் அறிக்கை நல்லது என, சரியாக முடிவெடுக்கின்றனர். அரசியல் கட்சிகள், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனவா என்பதை பார்த்து, சரியாக தீர்ப்பளிக்கின்றனர். எனவே, இலவச பொருட்கள் வழங்குவதாக, அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்க, தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. தீர்மானிக்கும் உரிமை மக்களுக்குத்தான் உண்டு. இதில், தேர்தல் கமிஷன் போன்ற அமைப்புகள் தலையிடக் கூடாது.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Comments