அயோத்தி ராம ஜென்ம பூமியே : பா.ஜ.,எம்.பி., ராமர் கோயில் விவகாரம் பார்லி.,யில் விவாதம்

புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் நடத்தவிருந்த யாத்திரைக்கு தடை விதித்ததை கண்டித்து பா.ஜ,. இன்று குரல் எழுப்பின. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து இது குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கினர்.
இதனையடுத்து நடந்த விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் பேசுகையில்; உ . பி.,யில் நடக்கவிருந்த யாத்திரையை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி தடை விதிக்கப்பட்டது. இந்த யாத்திரைக்கு பொதுமக்கள் தரப்பில் ஆதரவு கிடையாது. வி.எச்.பி., கோர்ட் உத்தரவை மீறியது, பா.ஜ,. அரசியலுக்காக இந்த நாடகத்தை நடத்துகிறது. பா.ஜ., வினர் அங்கு கலகத்தில் ஈடுபட்டனர்.
சமாஜ்வாடி கட்சியினரை தாக்கினர், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவே யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு முலாயம் சிங் பேசினார்.
தொடர்ந்து பா.ஜ., தரப்பில் யோகி ஆதித்யநாத் எம்.பி., பேசுகையில்: யாத்திரையில் பல்வேறு இடங்களில் இருந்து சாதுக்கள் மட்டுமே வந்திருந்தனர், எங்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. சாதுக்கள் மீது சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். சாதுக்களை இந்த அரசு வேதனைபடுத்தி விட்டது. அயோத்தி ராமஜென்ம பூமியே என்று சுப்ரீம் கோர்ட்டில் காங்., ஒத்துக்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் தடியடி:

இதற்கிடையில் யாத்திரைக்கு தடை விதித்ததை கண்டித்து டில்லி ஜந்தர்மந்தரில் வி.எச்.பி.,யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், போலீசார் தண்ணீர் பீய்ச்சி விரட்டினர். இது போல் மும்பை, பெங்களூரூவிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை : மும்பையில் பத்திரிகை போட்டோகிராபர் கற்பழிப்பு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் லோக்சபாவில் எழுப்புகையில் குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச மரணத்தண்டனை வழங்க வேண்டும். இது விரைவில் வழங்கப்பட வேண்டும் என்பது பா.ஜ.,வின் விருப்பம் என்றார்.

முன்னதாக இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே; இந்த வழக்கில் 20 சிறப்நப படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் 5 பேரும் விரைந்து கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். விரைவு கோர்ட்டில் இந்த விசாரணை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

யாத்திரை தடைக்கு பார்லி.,யில் எதிர்ப்பு ; பார்லி. கூட்டம் இன்று துவங்கியதும் உபி.யில் வி.எச்.பி. யாத்திரைக்கு அம்மாநில அரசு தடைவிதித்து, மூத்த தலைவர்களை கைது செய்த விவகாரத்தினை பா.ஜ. கையில் எடுத்ததால் அவையில் கூச்சல் நிலவியது. இதற்கிடையே இன்று உணவு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய காங். தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தை ரத்து செய்ய பா.ஜ. உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
பார்லி., கூட்டம் இன்று காலையில் துவங்கியதும் மத்திய அரசுக்கு எதிராக கணைதொடுக்கும் விதமாக பல்வேறு பிரச்னைகள் ரெடியா எதிர்கட்சிகள் வைத்திருந்தன. இதனால் இன்றும் பார்லி.,யில் அலுவல் எதுவும் நடக்காது என்றே தெரிகிறது. இதற்கிடையில் நிலக்கரி ஆவணங்கள் மாயமானது தொடர்பாக பிரதமர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லி., கூட்டம் துவங்கும் போதெல்லாம் மத்திய அரசு ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. கடந்த 2 வாரங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டன தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் எல்லையில் 5 வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பாதுகாப்புதுறை அமைச்சர் அந்தோணி தவறான தகவலை கொடுத்தார். இதனை கண்டித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தொடர்ந்து அமைச்சர் தனது தவறை ஒத்துக்கொண்டு திருத்திய அறிக்கையை படித்தார். இந்த பிரச்சனை ஒருவழியாக முடிந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் பா.ஜ., சமாஜ்வாடி , மற்றும் இடதுசாரி கட்சியினர், நிலக்கரி ஆவணங்கள் மாயம், தெலுங்கானாவிவகாரம், பாகிஸ்தான் தொடர் தாக்குதல் மற்றும் மும்பை பெண் நிருபர் கற்பழிப்பு, உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பின.

சி.பி.ஐ., விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளது. ஆவணஙகள் மாயமானது உண்மை தான் , இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று சுரங்கத்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். குறிப்பாக 1993 முதல் 2004 ம் ஆண்டு இடையிலான ஆவணஙகள் காணாமல் போய் இருக்கிறது. இதில் 47 நிறுவனங்களுக்கு வழங்கிய உரிமம், மற்றும் 147 விண்ணப்பம், காங்., எம்.பி., ஒருவருக்கு ஒதுக்கீடு செய்தது. இதற்கு பிரதமர் அலுவலகம் வழங்கிய ஒப்புதல் கடிதம் உள்ளிட்டவை மாயமானது. காணாமல் போன ஆவணங்கள் காலக்கட்டத்தை பார்க்கையில் இந்நேரத்தில் மன்மோகன்சிங்கே இந்த துறைக்கு பொறுப்பு வகித்தார். எனவே பிரதமரை காப்பாற்றவே இந்த ஆவணங்கள் காணாமல் போயிருக்கின்றன. சுரங்கத்துறை அமைச்சகம் தான் இந்த தீரவிளையாட்டை நடத்தி இருக்கிறது. இதற்கு பிரதமரும், அமைச்சரும் பதவி விலக வேண்டும் என கடந்த வாரம் பா.ஜ., குரல் எழுப்பின.

இந்நிலையில் இன்று பார்லி., நடக்குமா உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலையில் அவை துவங்கியதும், பா.ஜ., உறுப்பினர்கள் யாத்திரை தடை விவகாரத்தை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது. ‌தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Comments