மதுரை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி,
உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டையும் வீட்டையும் அழிக்கும் மது, இனிமேல் தமிழகத்தில் வேண்டாம் என்று
குரல் ஓங்கியுள்ளார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. டாஸ்மாக் கடைகள்
மூலம் கிடைக்கும் வருமானத்தை மாற்று வழியில் சம்பாதிக்க அரசு வழி காண
வேண்டும் என்பது நந்தினியின் கோரிக்கையாக உள்ளது.கடந்த திங்கள் கிழமை முதல்
உண்ணாவிரதம் இருந்து வரும் நந்தினிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளும்
சமூக அமைப்புகளும் நந்தினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பொதுமக்களும்
மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனி மனித போராட்டமாக ஆரம்பமான இவரது உண்ணாவிரதத்தில், தற்போது சென்னை லயோலா
கல்லூரியைச் சேர்ந்த ஜோ பிரிட்டோ, மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேர்
கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து இரவோடு இரவாக அனைவரும் கைது
செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பெற மறுத்த அம்மாணவர்கள் அங்கும்
உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
இந்த கைது சம்பவத்தைத் தொடர்ந்து புதிதாக 7 மாணவர்கள் அதே இடத்தில்
உண்ணாவிரதத்தை தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர்
அவர்களை அப்புறப்படுத்தினர்.
Comments