உணவு பாதுகாப்பு மசோதா விவாதம் துவக்கம் ; 1. 25 லட்சம் கோடி செலவு: அமைச்சர் தாமஸ்

புதுடில்லி: நீண்ட இழுபறிக்கு பின்னர் பல்வேறு இடையூறுகளை தாண்டி இன்று லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதம் துவங்கியது. இந்த மசோதா குறித்து அறிமுகம் செய்து வைத்து மத்திய உணவு துறை அமைச்சர் கே.வி., தாமஸ் பேசுகையில் இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் 80 கோடி மக்கள் பயன் அடைவர் என்றார்.

மத்திய அரசின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு திட்டம் கொண்டு வருவதன் மூலம் ஏழை மக்களின் ஓட்டுக்களை கவர முடியும் என நம்புகிறது காங்., இந்த திட்டம் பல முறை விவாதம் வரும்போதெல்லாம்
பார்லி.,யில் பல்வேறு பிரச்சனைகளால் மசோதா கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து காங்., அமைச்சரவை அவசர சட்டமாக கொண்டு வந்தது. இருப்பினும் லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டியிருப்பதால் எதிர்கட்சிகளின் கோரிக்கையான விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது.



80 கோடி பேர் பயன்பெறும் வகை:

இதன்படி இந்த மசோதா மீதான விவாதம் இன்று மதியம் துவங்கியது. இந்த விவாதத்தை துவக்கி வைத்து அமைச்சர் தாமஸ் பேசுகையில்: இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை , எளிய மக்கள் பயன் அடைவர். 80 கோடி பேர் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தில் பயனீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். கடந்த 2011 ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வு மாநில அரசுகள் மூலம் செய்யப்படும். பொது விநியோக திட்டத்தின்படிசெயல்படுத்தப்படவிருக்கும் இதில் 62 மில்லியன் டன் உணவு தானியங்கள் வழங்கப்படும். இதற்கென ஆண்டுக்கு ரூ. 1. 25 லட்சம் கோடி செலவாகும். கிராமப்புறத்தில் 75 சதவீதத்தினரும், நகர்ப்புறத்தில் 50 சதவீதத்தினரும் பயனடைவர். கர்ப்பிணி பெண்களை சிறப்பு கவனத்தில் எடுத்து இவர்களுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரள அரசின் ரேசன் பொருட்கள் குறைப்பு இடம்பெறாது. இவ்வாறு அவர் பேசினார்.


நாளை ஒட்டெடுப்பு :


இந்த மசோதா கொண்டுவருவதில் ஆட்சேபனை இல்லை என்றும், அதே நேரத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி பேசுகையில் கூறினார்.அவர் பேசுகையில், இந்த சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இது ஓட்டு பாதுகாப்பு மசோதா என்றார்.இந்த சட்டம் முழுமை பெறவில்லை என இடது சாரியை சேர்ந்தவர்கள் குறை கூறினர். இந்த மசோதா மீது காங்., தலைவர் சோனியா தமது அரசு தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பார் என தெரிகிறது. நாளை ஒட்டெடுப்பு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments