மோடியின் உண்மை முகம் என்ன ? பேட்டி முழு விவரம்

ஆமதாபாத்: தான் இந்துவாக பிறந்ததில் தவறு ஏதும் இல்லை என்றும், அதே நேரத்தில் நான் தேசப்பற்று மிக்கவன் என்றும் குஜராத் கலவரத்தில் நான் குற்றமற்றவன் என்றும் நான் தவறு செய்திருந்தால் குற்றவாளியாக உணர்ந்திருப்பேன் , ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.
குஜராத் கலவரம் அரசியல் பாதை மற்றும் மாநில வளர்ச்சி தொடர்பான சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு :



கேள்வி: நீங்கள் குஜராத் கலவரம் குறித்து பலர் விமர்சித்தார்களே அது உங்களின் மனதில் வருத்தம் ஏற்படுத்தியதா ?

பதில் : நான் தவறு செய்திருந்தால் , குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். ஆனால் எவ்வித தவறும் செய்யவில்லை. திருடி விட்டோம், இதனால் பிடிபட்டோம் என்று நினைத்தால்தான் பாதிப்பு வரும். ஆனால் எனது விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் உலகில் உள்ள மிகச்சிறந்த கோர்ட் என பறைசாட்டப்பட்டுள்ளது. இந்த சுப்ரீம் கோர்ட் கலவரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக்குழுவை அமைத்தது. இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நான் முழுமையாக குற்றமற்றவன் என்றும், இதில் எனக்கு தொடர்பு இல்லை என்றும் தெளிவாக கூறியுள்ளது. மற்றொரு உதாரணம் சொல்லுகிறேன், அதாவது நாம் கார் ஓட்டி சென்றாலோ அல்லது கார் பின்சீட்டில் அமர்ந்து சென்றாலோ, இந்நேரத்தில் ஒரு நாய் கூட கார் கீழ் உள்ள சக்கரத்தில் சிக்கினால் நாம் வருத்தப்படுவோமா ? மாட்டோமா ? அது போலத்தான் நான் முதல்வராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நான் மனித நேய மிக்கவனாக இருக்கின்றேன். எந்த வொரு இடத்தில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அது எனக்கு கவலையை தரும். நாங்கள் ஜனநாயக நாட்டில் பிறந்தவர்கள், யாருக்கும் , யாரையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. அவரவர் மனதில் உதிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்.

உங்கள் மாநில அரசு வித்தியாசமான விளைவுகள் பெற்று இருப்பது எப்படி ?

நாங்கள் எது சரி என நினைக்கின்றோமோ அதனை அப்படியே செயல்படுத்துகிறோம். நாங்கள்முழு அளவில் அறிவுத்திறமையை பயன்படுத்துகிறோம், இதனால் நாங்கள் அதிக அநுவங்களை பெற்று இருக்கிறோம். இதனை சிறப்பு புலனாய்வுக்குழுவும் ஆராய்ந்து பார்த்தது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற தலைவர் தேவை என நீங்கள் நினைக்கிறீர்களா ?

ஆம், இதைத்தான் நாங்கள் நம்பி கொண்டுள்ளோம். ஆனால் மதச்சார்பின்மை என்பது என்ன அர்த்தம், என்னைபொறுத்தரை எனக்கு மதச்õர்பின்மை என்பது, இந்தியா தான் எனக்கு முதல் இடம். நான் சொல்கிறேன் எனது கட்சியின் கொள்கையே அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதே ! யாருக்கும் சாதகமாக இருக்க்கூடாது. இது தான் எங்களின் மதச்சார்பின்மை.

எதிர்ப்பாளர்கள் உங்களை எதேச்சதிகாரி என்கின்றனர், ஆதரவாளர்கள் தீர்மானமாக திட்டமிட்டு முடிவு எடுப்பவர் என வர்ணிக்கிறார்களே, இதில் மோடியின் உண்மை முகம் என்ன ?

நீங்கள் ஒரு தலைவராக அழைக்கப்பட வேண்டுமென்றால் இதற்கு தீர்க்கமான முடிவு எடுக்கும் திறம் இருக்க வேண்டும். தெளிவான முடிவு எடுக்கும் போதுதான் தலைவராகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. இதுதான் தரம். இது எதிர்விளைவுகளை தராது. நாணயத்திற்கு 2 பக்கம் உண்டு. மக்கள் முடிவு எடுப்பதையை விரும்புகின்றனர். இதனை மட்டுமே கொண்டு அவர்கள் ஒருவரை தலைவராக ஏற்று கொள்கின்றனர். ஒருவர் சர்வாதிகாரியாக இருந்தால் அரசை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். நான் எப்போதும் சொல்வேன் இது மோடி வெற்றி அல்ல, மாநிலத்தின் வெற்றி. இதுவே குஜராத் அணி வெற்றி ஆகும்.

உங்களுக்கான விமர்சனத்தை நீங்கள் பொருட்படுத்துவதில்லேயே ஏன் ?

நான் எப்போதும் சொல்வேன், ஜனநாயக நாட்டில் பொய்களை ( தவறான விஷயங்கள் ) விமர்சனம் செயவதே பலம் என்று, அது போல நான் விமர்சனங்களை வரவேற்கிறேன். விமர்சனங்கள் இருந்தால் தான் வளர்ச்சி அடைய முடியும். ஆனால் விமர்சனம் என்பது வேறு குற்றச்சாட்டு என்பது வேறு. எனது மீது குற்றச்சாட்டுக்களுக்கு அப்பாற்பட்டவன். எதுவும் சொல்ல முடியாதவர்கள் தேவையற்ற விமர்சனங்களை செய்கின்றனர். மாநில திட்டத்தில் விமர்சனம் செய்பவர்கள் அதற்கு தீர்வு சொல்ல வேண்டும். இல்லாத பட்சத்தில் இது விமர்சனம் ஆகாது.

தங்கள் மீதான கருத்துக்கணிப்பு தகவல் குறித்து ?

கட்நத 2003 முதல் நான் கருத்துக்கணிப்பு மூலம் சிறந்த முதல்வர் என்ற தேர்வு செய்யப்பட்டு வருகிறேன். குஜராத் மக்கள் மட்டுமல்ல, பிற மாநில மக்களும் என்னை விரும்புவதாக ஓட்டளிக்கின்றனர். இது தொடர்பாக நான் ஒருமுறை கருத்துக்கணிப்பு நடத்திய இந்தியா டூடே குழுமத்தை சேர்ந்த அருண்பூரிக்கு கடிதம் எழுதினேன். தயவு செய்து என்னையே எப்போதும் சிறந்த முதல்வராக தேர்வு செய்கிறீர்களே என்னை தேர்வு செய்வதை நிறுத்துங்கள் , அல்லது போட்டியில் இருந்து என்னை நீக்கிவிடுங்கள் வேறு யாராவது ஒரு முறை சிறந்த முதல்வராக வரட்டும், அவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கட்டும் என்று எழுதினேன்.

கூட்டணியினர் உங்களை மாற்று கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்களே ?

என்னைப்பற்றி யாரும் அதிகாரப்பூர்வமாக யாரும் இப்படி சொல்லவில்லை.

உங்களுக்காக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை ஓட்டுக்களை பெற எப்படி முனைவீர்கள் ?

முதலில் இந்திய குடிமக்களுக்கும், வாக்காளர்களுக்கும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் சொல்வதென்வென்றால் நான், பிரிவினை வாதத்திற்கு துணையாக இருக்க மாட்டேன். இந்து, சீக்கியர்கள், இந்து, கிறிஸ்துவர்கள் என்ற பிரிவினைக்கு காரணமாக இருக்க மாட்டேன். எனது அடிப்படை கொள்கைள் பிரிவினையை போதிக்கவில்லை அனைத்து குடிமக்களும், அனைத்து வாக்காளர்களும் இந்திய குடி மக்கள். பிரிவினை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. இது ஜனநாயக நாட்டில் கருவியாக இருக்க முடியாது.

நீங்கள் பிரதமரானால் எந்த தலைவரை பின்பற்றுவீர்கள் ?

எனக்கு எந்தவொரு பெரிய பதவியையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எந்த கனவும் இல்லை. ஏதேனும் செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். நான் வாஜ்பாயிடம், காந்தியிடம், சர்தார் வல்லபாய் பட்டேலிடம் ஏதேனும் கற்று கொள்ள விரும்பும் பட்சத்தில் இதனை எனது மாநிலத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். டில்லியில் தலைமை பதவி பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பிரதமர் சீட் இல்லாமல் எது வேண்டுமானாலும் விவாதிக்கலாம்.

உண்மையான மோடி யார் என மக்கள் தெரிய விரும்புகின்றனர் - இந்து தேசியவாத தலைவரா அல்லது லாப நோக்கம் கொண்ட முதல்வரா என்று ?

நான் தேசியவாதி, நான் தேசப்பற்று மிக்கவன், இதில் எந்த தவறும் இல்லை, நான் பிறப்பால் இந்து, இதில் எந்த தவறும் இல்லை, ஆமாம் நான் இந்து தேசியவாதி, இதனை நீங்களே இந்து தேசியவாதி என்று சொல்ல முடியும். ஏனென்றால் நான் பிறப்பால் இந்து. அதேநேரத்தில் வளர்ச்சிக்கு பாடுபடும் நபராகவும் அடையாளம் காட்டப்படுகிறேன். இந்த இரண்டிலும் எவ்வித முரண்பாடும் இல்லை.

மக்கள் மத்தியில் தாங்கள் பிரபலமடைய பத்திரிகை யுக்திகள் கையாளப்படுவதாக கூறப்படுகிறதே ?

இல்லை. பத்திரிகை உலகம் என்பது இந்தியாவில், மேலைநாடுகளில் என்பதில் வித்தியாசப்படுகிறது. மீடியாக்கள் மூலம் ஒருவர் பிரபலப்படுத்தப்பட்டால் இது இந்தியாவில் பலனை தராது. மக்களுக்காக கடுமையாக உழைத்தால் மட்டுமே மக்கள் மனதில் நிற்க முடியும் இல்லையேல் நிராகரிக்கப்படுவோம். தவறாக பிரசுரித்தால் அது மோசமான விளைவுகளைத்தான் தரும். நடிப்பு ஜம்பம் எல்லாம் இந்திய மக்களிடம் எடுபடாது. இவர்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள். நேர்மையாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். எனது நாடு மாறுபட்டது. நான் எந்தவொரு மீடியாக்களையும் சந்தித்து ஆதரவு கேட்பதில்லை, யாரையும் என்னோடும் வைத்து கொள்வதில்லை. இவ்வாறு மோடி கூறினார்.

சஞ்சய் ராவத்,சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர்:
குஜராத் கலவரம் தொடர்பாக, நரேந்திர மோடி கூறியுள்ளதை வரவேற்கிறோம். நாட்டின் தலைமைப் பொறுப்பு, இந்துத்வா தலைவர் ஒருவரிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே, எங்களின் உறுதியான நம்பிக்கை. எங்கள் கட்சியின் நிறுவனரான, பாலாசாகிப் தாக்கரே, இதைத் தான் விரும்பினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்:சமாஜ்வாதி கட்சி கோரிக்கை:

குஜராத் முதல்வரின் இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர், கமல் பரூக்கி, ""நரேந்திர மோடி, என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை. குஜராத் கலவரத்துக்கு, காரில், நாய்க்குட்டி அடிபடுவதை உதாரணமாக கூறியுள்ளார். அப்படியானால், நாய்க்குட்டிகளை விட, முஸ்லிம்கள் மோசமானவர்களா? தான் தெரிவித்த கருத்துக்கு, நரேந்திர மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.

மத்திய சட்ட அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சல்மான் குர்ஷித் கூறுகையில், ""நரேந்திர மோடி, இந்திய மக்களை குறைவாக மதிப்பிட்டுள்ளார். மதம் தொடர்பான விஷயங்களில், மிக குறுகிய மனப்பான்மையுடன், அவர் செயல்படுகிறார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தின் மூலம், அவரே, அவரின் மிகப் பெரிய எதிராகியுள்ளார்,'' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் பிருந்தா கராத், இந்திய கம்யூ., மூத்த தலைவர் டி.ராஜா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், சிவானந்த் திவாரி ஆகியோரும், மோடியின் பேச்சுக்கு, கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments