பேய் நகரமானது கேதார்நாத்: சுப்ரீம் கோர்ட்டில் அரசு தகவல்

புதுடில்லி : உத்தரகண்ட் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட கேதார்நாத், பேய்களின் நகரம் என சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு பதில் அளித்த உத்தரகண்ட் அரசு வக்கீல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


உத்தரகண்ட் கூடுதல் அட்வகேட் ஜெனரல், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் ஆஜராகி உத்தரகண்ட் அரசு மேற்கொண்ட வரும் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்னும் ஏராளமானோரின் உடல்கள் கற்களுக்கு இடையேயும், மணலுக்கு அடியிலும் சிக்கி உள்ளது என தெரிவித்தார். மேலும் உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் மற்றும் அதற்கு முன் உத்தரகண்டிற்கு வந்தவர்கள் குறித்த பட்டியலை மற்ற மாநிலங்கள் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரகண்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரிக்கையில், ஜூலை 3ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி உத்தரகண்ட் அரசு செயல்பட்டு வருகிறது எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மீட்புப் பணிகள் மற்றம் உடனடி நிவாரணப் பணிகள் குறித்த விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேதார்நாத் தவிர வெள்ளம் பாதித்த மற்ற பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்புக்கள் சீரமைக்கப்பட்டுள்ளது; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் அல்லது மாநிலத்தின் வேறு பகுதிக்கு சென்று வாழ்வதற்கு தேவையான உதவிகள் ஆகியன செய்யப்பட்டுள்ளன;
கழுதை பாதைகளும், நடைபாதைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது; சீரமைப்பு பணிகளை தொடர்ந்து துண்டிக்கப்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கும் பணி சீராகும்; பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேற சில பேர் மறுத்து வருகின்றனர்; நவம்பர் 3வது வாரத்தில் கோயில்கள் மூடிய பிறகே தாங்கள் அவ்விடத்தில் விட்டு வெளியேறுவது வழக்கம்; வழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது என தெரிவிக்கின்றனர்; இருப்பினும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு மீட்புப் பணியில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் அவ்விடங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் பகுதியில் இன்னும் ஏராளமானோரின் உடல்கள் சிக்கி உள்ளது; இறந்தவர்களின் ஆவிகள் அங்கு உள்ளதால் தற்போது அது பேய் நகரமாக மாறி உள்ளது. இவ்வாறு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மீட்புப் பணிகள் குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Comments