போலீஸ் அதிகாரிகளுக்கு "இனோவா' கார்: தமிழக அரசு அனுமதி

சென்னை: போலீஸ் அதிகாரிகள், 61 பேருக்கு, இனோவா கார் வாங்கவும், திருச்சி நகருக்கு, 10 ரோந்து வாகனம் வாங்கவும், தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பிரச்னை ஏற்படும் பகுதிக்கு, விரைவாக செல்வதற்கு வசதியாக, இனோவா கார் வழங்கும்படி, போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, 92 இனோவா கார் வாங்க, டி.ஜி.பி., அரசுக்கு பரிந்துரை செய்தார். இதற்கு 10.45 கோடி ரூபாய் செலவாகும்
என, கணக்கிடப்பட்டது. கடந்த ஆண்டு, கலெக்டர் - எஸ்.பி., மாநாட்டில், முதல்வர் பேசும்போது, கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கள், அவர்கள் விரும்பும் வாகனத்தை, 8.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள, அனுமதி அளித்தார். தற்போது, எஸ்.பி., தவிர, டி.ஐ.ஜி., இணை கமிஷனர், கூடுதல் கமிஷனர், என, 61 பேருக்கு, 5.18 கோடி ரூபாயில், இனோவா கார் வாங்க, உள்துறை அனுமதி அளித்துள்ளது.

ரோந்து வாகனம்:

திருச்சியில், 14 போலீஸ் நிலையம், நான்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், ஆறு போக்குவரத்து போலீஸ் நிலையம் உள்ளது. திருச்சியை சுற்றியுள்ளப் பகுதியில், குடியிருப்பு அதிகரித்து வருகிறது. எனவே, குற்றங்களை தடுக்கவும், ரோந்து செல்லவும், கூடுதலாக, 10 ரோந்து வாகனம் தேவை என, டி.ஜி.பி., அரசிடம் தெரிவித்தார். அதை ஏற்று, 61.09 லட்சம் ரூபாயில், 10 பொலிரோ ரோந்து வாகனங்கள் வாங்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

Comments