
குற்றாலம்: குற்றால அருவிகளில் கொட்டி தீர்க்கும் தண்ணீரால் தொடர்ந்து
குளிக்க தடை ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்
அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக விழுகிறது.
குற்றாலத்தில் சீசன் கடந்த மே 31ம் தேதி முதல் துவங்கியதிலிருந்து சாரல்
மழையும் குளு குளு காற்றுமாய் வீசி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.
கடந்த ஒருவார காலமாக
வெயிலை காண முடியாத நிலையே காணப்பட்டது. மேற்கு
தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர்
வரத்து அதிகரித்துள்ளது.
மெயின் அருவியில் வெள்ளம்
பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி பாலத்தை தொடும் அளவிற்கு
தண்ணீர் கொட்டுகிறது. இதனால் பயணிகள் யாரும் அருவிக்கரை பக்கம் கூட செல்ல
அனுமதிக்கப்படவில்லை.
சாரல் மழையோடு ஆக்ரோமாக அருவியும் கொட்டுவதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக
இன்று குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஏமாற்றம்
இதனால் வெளியூர்களில் இருந்து அருவியில் குளிக்கலாம் என்று ஆசையோடு வந்த
சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சீசன் சூப்பராக இருக்கிறது என்று
தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்து வந்தோம். ஆனால் அருவியில் குளிக்க
திடீர் என்று தடை விதித்துவிட்டதாக பயணிகள் கூறினர்.
சாரல் மழையில் நனைந்து
அருவியில் தண்ணீர் குறையும் அப்போது குளிக்கலாம் என்று சாரல் மழையில்
நனைந்தவாறு பயணிகள் காத்திருக்கின்றனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன்
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அருமையாக உள்ளதாகவும் பயணிகள்
தெரிவித்தனர்.

9 வது முறையாக
குற்றாலம், தென்காசி பகுதியில் கடந்த 15 தினங்களாக ஒருநாள் கூட இடைவெளி
இல்லாமல் சாரல் பெய்து வருவதுடன், சீசன் துவங்கிய இந்த 5 வார காலத்திற்குள்
9 முறை மெயினருவியில் குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் கொட்டியது.
ஐந்தருவியிலும் வெள்ளம்
மெயினருவி மட்டுமல்லாது ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி,
புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் குற்றாலத்திற்கு வந்த பயணிகள் கேரளா மாநிலம் ஆரியன்காவு பாலருவி
நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
Comments