
சீர்திருத்த நடவடிக்கை:
டில்லியில்,
நேற்று, "அசோசெம்' அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து
கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
நாட்டில் பொருளாதார மந்த நிலை,
அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது,
திருப்திகரமாக இல்லை. இது கவலையளிக்கிறது. ஆனாலும், இதை சரி செய்தே தீருவது
என்ற உறுதியுடன், மத்திய அரசு செயலாற்றிக் கொண்டு வருகிறது. யாரும்
பீதியடையத் தேவையில்லை என்ற வகையில், பொருளாதார சீர்திருத்த
நடவடிக்கைகளில், அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாட்டின்
பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நாள், வெகுதூரத்தில்
இல்லை என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, 6
சதவீதத்தை விட குறையும் என்று, உலக வங்கி கணித்துள்ளது. இது ஏற்கத்தக்கது
அல்ல.
கணிப்பு:
உலக
வங்கி கூறும் அளவுக்கு வளர்ச்சி குறைந்து விடாது. நடப்பு நிதியாண்டிற்கான
பட்ஜெட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதம் வரை இருக்கும்
என்று, கூறப்பட்டிருந்தது. இந்த கணிப்பில், மாற்றம் வரலாம் என்பது போல,
நிலைமைகள் உள்ளன. அனேகமாக, நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டில் கூறப்பட்டதை விட,
பொருளாதார வளர்ச்சி சற்று குறைவாக காணப்படும்.
விவசாயம்:
தொழில்துறை
வளர்ச்சி, இன்னும் தீவிரம் அடையாமல் உள்ளது. அதேசமயம், விவசாயத் துறையில்
நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. இந்த ஆண்டு, நாட்டின் விவசாயத் துறையில், 4
சதவீதம் வரை வளர்ச்சி இருக்கலாம் என்று, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
கிராமப்புறங்களில், விவசாயத் துறையில் மிக அதிக அளவுக்கு வளர்ச்சி,
காணப்படும். அப்படி பார்க்கையில், விவசாயத் துறை மூலமாக, தொழில்துறையில்
வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு,
குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு, அமெரிக்க மத்திய வங்கி எடுத்து வரும்
நடவடிக்கையும் காரணம். இந்தியா மட்டுமின்றி, துருக்கி, தென் ஆப்ரிக்கா,
பிரேசில் போன்ற நாடுகளின் கரன்சி மதிப்பும், மிகவும் குறைந்து போய்
காணப்படுகிறது. தவிர, இந்தியாவில், நடப்புக் கணக்கு பற்றாக்குறையும்
அதிகமாக உள்ளது. இதுவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, குறைவதற்கு
ஒரு முக்கிய காரணம்.
கட்டுப்பாடுகள்:
ரூபாயின்
மதிப்பு குறைவதை கட்டுப்படுத்துவதற்கு, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்க்கான
தேவையை, கணிசமான அளவில், குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து
வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல், தங்க இறக்குமதிக்கு, கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தங்கத்தின் இறக்குமதி, கட்டுப்பாட்டுக்குள்
உள்ளது. நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு தேவையான, அனைத்து
நடவடிக்கைகளையும் மேற்கொள்ள, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக,
இன்னும் ஓராண்டிற்குள், இரும்புத் தாது போன்றவற்றின் ஏற்றுமதியை,
மறுபடியும் அதிகரிப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நிலக்கரி:
எரிசக்தி
துறையில், அதிகளவில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு, முயற்சிகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. அனல் மின் நிலையங்களுக்கு, தேவையான நிலக்கரியை,
எந்தவித தாமதமும் இன்றி அளிக்கும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய
ஜனநாயக கூட்டணி ஆட்சியை விட, கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், பொருளாதார வளர்ச்சி, நன்றாகவே உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், 5.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 8 சதவீதமாக உயர்ந்து இருந்தது.
இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங், பேசினார்.
Comments