பீகாரில் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் பலி: கவனமாய் செயல்பட மத்திய அரசு "வேண்டுகோள்'

சாப்ரா: பீகாரில், அரசு துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம், மதிய உணவு சாப்பிட்டு இறந்த குழந்தைகள் எண்ணிக்கை, நேற்று, 22 ஆக அதிகரித்துள்ளது. கெட்டுப் போன உணவுப் பொருட்களை பயன்படுத்தி, உணவு சமைத்து வழங்கியதால் தான், குழந்தைகள் பலியாக நேர்ந்தது என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநிலம், சாப்ரா மாவட்டத்தில், தர்மசதி காண்டவான் என்ற கிராமத்தில் உள்ள, 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளியில், குழந்தைகளுக்கு, மதிய உணவு கொடுக்கப்பட்டது. சாப்பிட்ட சில நிமிடங்களில், பல குழந்தைகள் மயங்கி விழுந்தன. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மதிய உணவு பணியாளர்கள், குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி, சாப்ரா அரசு மருத்துவமனை மற்றும் பாட்னா மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். எனினும், சாப்பிட்ட உணவில் இருந்த விஷத்தின் வீரியம் காரணமாக, நேற்று முன்தினம், 16 குழந்தைகள் பரிதாபமாக இறந்து விட்டன. நேற்றும், பல குழந்தைகளின் நிலைமை மிக மோசமானது. குழந்தை மருத்துவ வல்லுனர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல், நேற்று, ஆறு குழந்தைகள் இறந்தன. அவர்களில், மூன்று குழந்தைகள், அந்தப் பள்ளியில் சமையலறை உதவியாளர்களாக பணியாற்றும் இரண்டு பேரின் குழந்தைகள்.

சிலர் கவலைக்கிடம்:

இன்னமும், 25 குழந்தைகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன; அவர்களில் சிலரது நிலைமை, கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. சமையலறை உதவியாளர்களின் குழந்தைகளே இறந்துள்ளதால், இந்த சோக சம்பவத்திற்கு, சமையலறை உதவியாளர்களின் சதிச் செயல் காரணமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த அதிகாரிகள், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட, எண்ணெய் மற்றும் பிற உணவுப் பொருட்கள், காய்கறிகளின் தரம் தான் மோசமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். கையிருப்பில் இருந்த உணவின் மாதிரிகள் மற்றும் இருப்பில் இருந்த உணவு தானியங்களை, பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற அதிகாரிகள், சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, "மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தும் போது, மிகுந்த கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கவனமாக செயல்படுங்கள்:

டில்லியில் நேற்று, பத்திரிகையாளர்களை சந்தித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு கூறியதாவது: பீகார் குழந்தைகள் பலியான விவகாரம் குறித்து, முழு அளவில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கெட்டுப் போன உணவுப் பொருட்களால், உணவு தயாரித்தது தான், இந்த சோகத்திற்கு காரணம் என தெரிகிறது. எனினும், விசாரணைக்குப் பிறகே, உண்மை தெரிய வரும். மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தும் போது, மிகுந்த கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என, மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு, அமைச்சர், பல்லம் ராஜு கூறினார். அத்துறையின் இணைஅமைச்சர், ஜிதின் பிரசாதா கூறும் போது, ""குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்கும் முன், பெரியவர்கள் இருவர், அதைச் சாப்பிட்டு பார்த்த பிறகு தான், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்திஉள்ளோம்,'' என்றார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரிகள் பலரும், பீகார் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள், 22 பேர் பலியானதால் கோபம் கொண்ட பொதுமக்கள், பாட்னாவில் உள்ள மாநில மதிய உணவு அலுவலகத்தை தாக்கி, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

ஆர்கனோ பாஸ்பரஸ்:

மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறிய, ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், ""மதிய உணவு திட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை, மாநில அமைச்சர் ஒருவர், தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து வழங்கி வருகிறார்; அது குறித்து விசாரிக்க வேண்டும்,'' என்றார். பீகார் மாநில பாரதிய ஜனதா முக்கிய தலைவரும், பா.ஜ., தேசிய துணைத் தலைவருமான சி.பி.தாக்குர், ""உணவில் ஆர்கனோ பாஸ்பரஸ் என்ற நச்சு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது,'' என்றார். இதற்கிடையே, சத்துணவு சாப்பிட்ட, 22 குழந்தைகள் பலியானதை கண்டித்து, பீகாரின் சரண் மாவட்டத்தில் நேற்று, "பந்த்' அனுசரிக்கப்பட்டது. வன்முறையில் சிலர் இறங்கினர்; மூன்று போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

Comments