சமீபத்தில் நடந்த ராஜ்யசபா
தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் இளங்கோவன் போட்டியிட்டார். அவருக்கு
ஓட்டளிக்கும்படி, அக்கட்சி தலைவர் மற்றும் பொதுச் செயலரான விஜயகாந்த்,
கட்சி கொறடா சந்திரக்குமார் ஆகியோர், கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம்
எழுதினர். அதிருப்தி எம்.எல்.ஏ.,க் களான சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல்
ராயப்பன், நடிகர் அருண்பாண்டியன், சாந்தி, சுரேஷ்குமார், பாண்டியராஜன்,
ஆகியோருக்கும் கடிதம் அனுப்பினர். "சஸ்பெண்ட்' : ஆனால், அதிருப்தி
எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டளித்தனர். கட்சி தலைமை
உத்தரவை மீறி, மாற்றுக் கட்சிக்கு ஓட்டளித்ததற்காக, கடந்த மாதம், 29ம்
தேதி, ஏழு பேரையும், கட்சியில் இருந்து தற்காலிகமாக, சூசஸ்பெண்ட்' செய்து,
விஜயகாந்த் கடிதம் அனுப்பினார். மேலும், "10ம் தேதிக்குள், மாற்று
கட்சிக்கு ஓட்டளித்ததற்கு, விளக்கம் அளிக்க வேண்டும்' எனவும்
உத்தரவிட்டிருந்தார்.
புகார் கடிதம்:
ஆனால்,
விஜயகாந்திற்கு பதில் கடிதம் அனுப்புவதை, தே.மு.தி.க., அதிருப்தி
எம்.எல்.ஏ.,க்கள் தவிர்த்து விட்டனர். கட்சியிலிருந்து நீக்குவதை, ஆவலுடன்
எதிர்பார்ப்பதாக அறிவித்தனர். அத்துடன், "தங்களை தே.மு.தி.க.,
வேட்பாளருக்கு, ஓட்டுபோடும்படி கட்டாயப்படுத்திய, விஜயகாந்த் மீது,
கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீண்குமாருக்கு, சில தினங்களுக்கு முன், கடிதம் மூலம் புகார் மனு
அனுப்பினர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
"ஜனாதிபதி
தேர்தலில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டு போடுவது தொடர்பான
வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், "எம்.பி., -
எம்.எல்.ஏ.,க்கள், யாருக்கு ஓட்டுப் போடுவது, என்பது அவர்களின் விருப்பம்.
ஓட்டு போடுவதும், போடாததும் கூட, அவர்களின் விருப்பம். இதில் யாரும்
தலையிடக்கூடாது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேர்தல்
கமிஷன் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதை மீறி, விஜயகாந்த்,
தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனுக்கு, ஓட்டுபோடும்படி உத்தரவிட்டுள்ளார்.
இது தேர்தல் விதியை மீறும் செயல், எனவே, அவர் மீது, இந்திய தண்டனை சட்டம்,
பிரிவு "171 சி'யின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகார்
மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனை:
கடிதத்தை
பெற்ற பிரவீண் குமார், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ராஜ்யசபா
தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டசபை செயலருமான ஜமாலுதீனுக்கு
அனுப்பியுள்ளார். அவர் கடிதம் குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன்,
ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து, தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில்,
""அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் அலுவலர்,
விஜயகாந்த் மற்றும் சந்திரகுமார் மீது, காவல் நிலையத்தில் புகார்
செய்யலாம். புகார் செய்தால், போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவர்
மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது' என்றனர்.
சந்திக்க தயார்:
அதேநேரம்,
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்துள்ள புகார் மீதான நடவடிக்கையை
எதிர்கொள்ள, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் தயாராகி வருகிறார்.
இதுகுறித்து, தே.மு.தி.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த, ஏழு எம்.எல்.ஏ.,க்களிடம், விளக்கம் கேட்டு
கடிதம் எழுதினோம். அவர்கள் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. கட்சி
தலைமைக்கு கட்டுப்படாததால், சூசஸ்பெண்ட்' நடவடிக்கை எடுத்த, தலைவர் மீதே,
தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளனர். அவர்கள், கொடுத்த புகாரின் மீது,
என்ன நடவடிக்கை எடுக்கப்படும், என்பது எங்களுக்கு தெரியும். அதையெல்லாம்
எதிர்கொள்வதற்கு, நாங்கள் தயாராகவே இருக்கிறோம். யாருடைய பேச்சை கேட்டுக்
கொண்டு, ஏழு எம்.எல்.ஏ.,க்களும், தலை, கால் புரியாமல் ஆடுகின்றனர், என்பதை
விரைவில் வெளிச்சம் போட்டு காட்டுவோம். ஏழு எம்.எல்.ஏ.,க்களுக்கும்,
விரைவில் பாடம் கற்பிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
விஜயகாந்த் திடீர் மாயம்:
சொந்த
தொகுதியான ரிஷிவந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நிகழ்ச்சிகளில்
பங்கேற்க, விஜயகாந்த் மனைவியுடன் நேற்று முற்பகல், 11:45 மணிக்கு வந்தார்.
பகண்டை கூட்டுரோடு, தோப்புச்சேரியில், அங்கன்வாடி மையத்தைத் திறந்து
வைத்தார். பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், புதிய எம்.எல்.ஏ., அலுவலகத்தை
திறந்து வைத்தார்; மாற்று திறனாளிகளுக்கு, உபகரணங்களை வழங்கினார்.
மாவட்டத்தில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், மேடையில் பேசுவதைத்
தவிர்த்தார். பகல், 12:00 மணிக்கு, பத்திரிகையாளர்களுடன் பேசினார். பின்,
தொகுதி வளர்ச்சி குறித்து, அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடக்க இருந்தது. இந்த
நிலையில் பகல், 12:15 மணிக்கு, திடீரென விஜயகாந்த் மொபைல்போனுக்கு அழைப்பு
வந்தது. உடனே பரபரப்பு அடைந்தவர், உடனே காரில் புறப்பட்டார். அரைமணி
நேரத்திற்கு பின், வந்த தே.மு.தி.க., மாவட்ட செயலர் வெங்கடேசன், "அவசர வேலை
காரணமாக, விஜயகாந்த் சென்னை சென்றதால், தொடர்ந்து நடக்க இருந்த
நிகழ்ச்சிகள், ரத்து செய்யப்பட்டுள்ளது' என்றார். ஆனால், விஜயகாந்த் நேற்று
மாலை சென்னைக்கும் வரவில்லை.
பெங்களூரில் தஞ்சம்:
விஜயகாந்த்
மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைது
நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அவர், பெங்களூரு சென்றுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. மனைவியுடன் ரிஷிவந்தியத்தில் இருந்து, அவசர அவசரமாக
விஜயகாந்த் புறப்பட்டார். விழுப்புரத்தில் இருந்து, பிரேமலதா மட்டும்
சென்னை திரும்பினார். ஆனால், கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கருதி,
அங்கிருந்து சேலம் வழியாக, விஜயகாந்த் பெங்களூரு சென்றுள்ளதாக தெரிகிறது.
இவ்வழக்கில் முன்ஜாமின் வழங்ககோரி விஜயகாந்த் தரப்பில் இன்று ஐகோர்ட்டில்
மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்ஜாமின் கிடைத்த பிறகே, சென்னை திரும்ப
விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Comments