
பெண்களின்
கற்பு பற்றி நடிகை குஷ்பு தெரிவித்த கருத்தினால், அவருக்கு பல்வேறு
தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளை
சமாளிக்க, அரசியல் கட்சியில் சேர, குஷ்பு முடிவெடுத்தார். காங்கிரசில் சேர
குஷ்பு முயற்சி எடுத்தார். ஆனால், கடைசி நேரத்தில் அத்திட்டத்தை கைவிட்டு
விட்டு, தி.மு.க.,வில், கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் இணைந்தார். தேர்தல்
பிரசாரத்தில், தீவிரமாக ஈடுபட்டார். தி.மு.க., செயற்குழு, நிர்வாகக்குழு
போன்ற முக்கிய கூட்டங்களில் குஷ்புவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கட்சி ரீதியாக நடத்தப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட அளவில்
தலைமை வகிக்கவும், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. "தனக்கு பின், தமிழ்
சமுதாயத்திற்கு பாடுபடக்கூடிய தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்பார்' என,
தி.மு.க., தலைவர் கருணாநிதி, கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அவரது
பேச்சுக்கு தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி, "தி.மு.க., மடம் அல்ல' என,
எதிர்ப்பு தெரிவித்தார்.
"தி.மு.க., வின் அடுத்த வாரிசு யார்?'
என்ற சர்ச்சைக்குரிய கேள்விக்கு குஷ்பு பதிலளிக்கும் போது, "தி.மு.க., வில்
அடுத்த தலைவரை, கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும்' என, பதிலளித்தார்.
அவரது பதில் பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை
ஏற்படுத்தியது. திருச்சியில், முன்னாள் எம்.பி., திருச்சி சிவா இல்ல திருமண
விழாவில் பங்கேற்ற குஷ்பு மீது, ஸ்டாலின் ஆதரவாளர்கள் செருப்பை வீசினர்.
சென்னையில், குஷ்பு வீட்டையும் தி.மு.க.,வினர் கல்வீசி தாக்கினர். "குஷ்பு
தெரிவித்த கருத்தில், எந்த தவறும் இல்லை' என, அவருக்கு ஆதவராக, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்தார். அதன் பின் அறிவாலயத்தில் நடந்த சில
நிகழ்ச்சிகளில் குஷ்பு கலந்து கொண்டார். கருணாநிதியின், 90வது பிறந்த
தினத்தை ஒட்டி, அவரது கோபாலபுரம் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது குடும்ப உறுப்பினர்கள் குஷ்பு மீது அதிருப்தி அடைந்தனர். ராஜ்யசபா
தேர்தலில், தி.மு.க., சார்பில் தனக்கு,"சீட்' கிடைக்கும் என, குஷ்பு
எதிர்பார்த்தார். ஆனால், கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் மாநில செயலர்
கனிமொழி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் கனிமொழி வெற்றி
பெற்றதற்கு, குஷ்பு வாழ்த்து தெரிவிக்கவில்லை. கனிமொழியின் வெற்றிக்கு
உழைத்த ஸ்டாலினுக்கும், குஷ்பு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில்,
இம்மாதம், 8ம் தேதி, சேதுசமுத்திர திட்டத்தை வலியுறுத்தி, தி.மு.க.,
நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்புவை பங்கேற்க வைக்க அழைப்பு விடுக்காமல்,
ஓரங்கட்டப்பட்டார். தி.மு.க.,வில், தீவிர அரசியலில் ஈடுபடவிடாமல், குடும்ப
உறுப்பினர்களின் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால், அக்கட்சியை விட்டு
வெளியேறும் நிலைக்கு குஷ்பு தள்ளப்பட்டுள்ளார் என, அக்கட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. இதுகுறித்து, "டுவிட்டர்' இணைய தளத்தில் குஷ்பு
கூறும்போது, "என்னை பற்றி வந்த செய்தி வதந்தி என தெரிந்தும், அதனை நான்
மறுக்க வேண்டும் என, தொலைபேசி மூலம் வற்புறுத்துகின்றனர். இதனை என்னால்
ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் இருக்கவில்லை.
இது ஜனநாயக நாடு. சிந்திக்கவும், தங்கள் விருப்பப்படி கருத்துக்களை
கூறவும், மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, இந்த வதந்தி குறித்து
விளக்கம் கேட்டு, என்னிடம் யாரும் வரவேண்டாம். நான், "பிசி'யாக
இருக்கிறேன்' என்றார்.
Comments